விகடன் திரை விமர்சனங்கள் ஒரு பார்வை
பகுதி 2
![]() |
விகடன் திரை விமர்சனங்கள் ஒரு பார்வை பகுதி 2 |
1964 முதல் 1974 வரையிலான விகடனின் விமர்சனம் குறித்த ஒரு பார்வை -பகுதி 2
நண்பர்களே,
1974 வரையிலான விகடன் விமர்சனங்களின் நமது பார்வை தொடர்கிறது....
06.10.1968 இதழில் மக்கள் திலகத்தின் நூறாவது படமான ஒளி விளக்கு திரைப்படம் விமர்சனம் செய்யபட்டுள்ளது. ஒரு மாறுதலுக்காக ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி, ஒரு ஆசிரியர், ஒரு கல்லூரி மாணவர், ஒரு அரசு ஊழியர் இரு குடும்ப தலைவிகள் இணைந்து நிஜமாக உரையாடி விமர்சனம் செய்துள்ளனர். எம்ஜிஆர் படத்தில் கொஞ்சம் பக்தி உள்ள படம் இது என்று குறிப்பிடுகின்றனர். சௌகார் ஜானகி கதாபாத்திரம் ஜெயலலிதா கதாபாத்திரத்தை ‘over shadow’ செய்து விட்டதாக குறிப்பிடுகின்றனர். நெருப்பு காட்சியில் எம்.ஜி.ஆர் நடிப்புக்கு ஸபெஷல் மென்ஷன் உள்ளது.’நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடி ‘ பாடல் வரிகளுக்காக வாலி அவர்களை பாராட்டி இருக்கின்றனர்.
(இதில் விஷேசம் என்னவென்றால் இந்த படத்தை தயாரித்த ஜெமினி நிறுவனம் ஆனந்த விகடன் குழுமத்தை சேர்ந்ததே. இந்த படத்தில் எல்லாம் சரியாக அமைந்தும் மிகப் பெரிய Blockbuster வெற்றியை பெறவில்லை. எம்.ஜி.ஆர் மது அருந்தியது போல் காட்சி அமைந்த ஒன்றிரண்டு படங்களில் இதுவும் ஒன்று).
29.12.1968 இதழில்
எதிர் நீச்சல்
படத்தை வெகுவாக பாராட்டி ஒரு வெற்றிகரமான நாடகம் ஒரு வெற்றிகரமான படமாக உருவாக்கியிருக்காங்கனு
சொல்லியிருக்காங்க.
சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைத்திருக்கிறார் இளம் இயக்குனர் கே.பாலச்சந்தர் அப்படீன்னு எழுதியிருப்பதை படிக்கும் போது பாலச்சந்தர் அவர்களை மூத்த இயக்குனராக மட்டுமே பார்த்து பழகிய பெரும்பாலானவர்களுக்கு
சற்று வித்தியாசமாக தான் இருக்கும். மாது(நாகேஷ்),பட்டு மாமி(சௌகார்), கிட்டு மாமா(ஶ்ரீகாந்த்), நாயர்(முத்துராமன்), சபாபதி(மேஜர்) கேரக்டர்களையும் பாலசந்தரின் வசனத்தையும் நிறைய பாராட்டியிருக்காங்க.
நாகேஷ் மாதுவாகவே மாறிட்டார் என்று நிறைய பாசிட்டிவாக விமர்சனத்தில் கூறப்பட்டிருந்தாலும்
ஏனோ இன்னும் கொஞ்சம் உயர்த்தி பிடித்திருக்கலாமோன்னு
தோனுது.
(அறிஞர் அண்ணா அவர்கள் பார்த்த கடைசி படம் இதுதான். இப்படத்தில் பட்டு மாமியாக சௌகார் ஜானகி இளமை ததும்பலோடு அசத்தியிருப்பார். இவரது ஜோடியாக நடித்த ஶ்ரீகாந்தை விட நிஜத்தில் இவர் பத்து வயது மூத்தவர். அன்றும் சரி இன்றும் சரி Fit and Healthy Lifestyle-க்கு எடுத்துகாட்டு சௌகார். இப்படத்தில் நடித்த அனைவருமே நாடகத்திலிருந்து திரை துறைக்கு வந்தவர்கள். சௌகாரை தவிர. சௌகார் ஜானகி திரை துறையில் உச்சம் தொட்ட பின்னர் ஒரு சவாலாக நாடகங்களில் நடிக்க தொடங்கினார். அவரை நாடகங்களில் நடிக்க அழைத்து கொண்டு வந்தவர் அவரது வீட்டில் டெலிஃபோன் கனெக்ஷன் செக் செய்ய டெலிஃபோன் டிபார்ட்மென்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஒரு டெலிஃபோன் மெக்கானிக். பாலச்சந்தரின் நாடக குழுவில் இடம் பெற்றிருந்த இவர் டெலிஃபோன் மெக்கானிக்காக சௌகாரிடமிருந்த பரிச்சயத்தில் பாலச்சந்தரின் சார்பாக சௌகாரிடம் கேட்க, சௌகாரும் நாடகங்களில் நடிக்க சம்மதித்தார். அந்த டெலிஃபோன் மெக்கானிக்கின் பெயர் (மேஜர்) சுந்தராஜன்.
தனது
மகளின் திருமணத்திற்கு பின் ஹீரோவாக தொடர்ந்து நடித்தவர்கள் பலர். ஆனல் தன் மகளின் திருமணத்திற்கு பின்னரும் ஹீரோயினாக நடித்தவர் அனேகமாக சௌகார் மட்டுமே. நடிகைகள் கல்யாணம் ஆனாலே அக்கா
வேஷம், அம்மா
வேஷம் கொடுத்து விடும் சினிமாக்காரர்கள் சௌகாரை மட்டும் ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்களாக கதாநாயகியாகவே பார்த்தனர். இன்று நடிகர்/நடிகையர் காஸ்டியூம்களுக்காக வெளிநாடுகளுக்கெல்லாம்
போய் சில கோடிகள் செலவு செய்கின்றனர். ஆனால் சௌகார் நடித்த ஒரு பாடல் காட்சியில் காஸ்டியூம் திருப்திகரமாக அமையவில்லை. உடனே சௌகார் தன் வீட்டிற்க்கு சென்று தன்னிடமிருந்த ஒரு உடையை மாற்றி அணிந்து வர அனைவருக்கும் பிடித்தது. அந்த பாடல் தான் சௌகார் கிளப்பில் பாடும் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’. இந்த
வருடத்தோடு சௌகார் நடிக்க வந்து 71 ஆண்டுகள் ஆகிறது. தமிழ் சினிமா கொண்டாட வேண்டிய பொக்கிஷங்களில் இவரும் ஒருவர்.)
3.5.1970 இதழில் வியட்னாம் வீடு படத்தின் விமர்சனத்தில் படத்தின் உண்மையான பிரஸ்டீஜ், நடிகர் திலகத்தின் நடிப்பு தான் என ரொம்ப சரியா சொல்லியிருக்காங்க. நாகேஷ் கதாபாத்திரம் ஏமாற்றமாக இருப்பதையும், ஶ்ரீகாந்த் அழகா மனைவிகிட்ட பயப்படறார் என்றும் குறிப்பிடறாங்க. எல்லாம் சரி. ரிட்டையர்மெண்ட் டேட் தெரியாத ஜெனரல் மானேஜர் இருப்பாரான்னு கதையின் பலவீனத்தை ரொம்ப சரியா சுட்டி காட்டியிருக்காங்க. சிவாஜி- பத்மினி இடையிலான அன்யோன்யம் முதுமை வரை தொடர்வதை நன்றாக சித்தரித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
(தமிழில்
ரிடையர்டு லைஃப் பற்றி எடுக்கப்பட்ட முதல் திரைபடம் அநேகமாக வியட்நாம் வீடு தான். அதுவும் வெகு சில படங்களே அந்த லிஸ்டில் உள்ளன. உடனே ரிட்டையர்டு லைஃபில் சும்மா இல்லாமல் Don ஆக மாறி பஞ்ச் டையலாக் பேசி சமுதாயத்தை திருத்தும் Vigilante
கதையை நூற்றி ஐம்பது கோடி பட்ஜட்டில் யோசிக்காதீங்க. பாவம் நம்ம தயாரிப்பாளர்கள்).
21.3.1971 இதழில் முகமது பின் துக்ளக் படத்தின் விமர்சனத்தில் ஒரு சமுதாயத்தின் பலவீனத்தை மொத்தமாக கேலி செய்யும் சாமர்த்தியம் சோ அவர்களுக்கு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது .
(அநேகமாக தமிழில் வெளிவந்த முதல் Political Satire படம் இதுதான். இப்படம் ஏற்கனவே நாடகமாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. படமாக வருவதை விரும்பாத சிலர், இப்படம் தயாராகும் போது செய்த இடையூரால் பல நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் பாதியிலேயே விலகி கொண்டனர். ஆனால் எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல் தான் ஒப்புகொண்டதை முழுசாக முடித்தே தீருவேன் என்று உறுதியாக நின்றவர் MSV. இதில் MSV பாடிய ‘ நீ இல்லாத இடமே இல்லை நீ தானே அன்பின் எல்லை அல்லா அல்லா ‘ என்ற பாடல் இன்றும் அனைவராலும் நேசிக்க படும் பாடல். இந்த பாடலை முதலில் பாட மறுத்தார் MSV. சீட்டு குலுக்கி போட்டதில் MSV பெயர் வந்ததால் அவரே பாடி முடித்தார். Recording முடிந்த பின் தான் தெரிந்தது அத்தனை சீட்டுகளிலும் MSV பெயரையே சோ எழுதியிருந்தார் என்று. இன்று வரை தமிழில் Political Satire genre படங்களுக்கு பெஞ்ச்மார்க் முகமது பின் துக்ளக் படமும் அமைதி படை படமும் தான். சரிதானே நண்பர்களே?)
30.4.1972 இதழில் எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா நடித்த ராமன் தேடிய சீதை படத்தின் விமர்சனம் ராஜேஷ் என்ற சாமானியர் தன் தோழி லதாவுக்கு எழுதும் கடிதத்தில் விவாதிப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது (இன்றைய டவிட்டர் ரெவியூவிற்கு முன்னோடி டோய்). எம்.ஜி.ஆர் க்கு வித்தியாசமான கதாபாத்திரம் என்றும் படத்தின் ஆரம்பத்திலேயே தான் மணக்க போகும் பெண்ணை அடையாளம் கண்டு கொண்டு விடுவதால் சுவாரஸ்யம் குறைவு என்றும் குறிப்பிடுகிறார். ஜெயலலிதா அவர்களின் நடனத்தை பாராட்டி ஒரு ஸ்பெஷல் மென்ஷன் உள்ளது. எம்.ஜி.ஆரின் கன்னத்தில் பாம்பு தீண்டி விட ஜெயலலிதா உடனே தன் உதட்டை கன்னத்தில் வைத்து விஷத்தை எடுப்பது போல் காட்சி அமைத்து சாமர்த்தியமாக சென்ஸாரிடம் இருந்து தப்பித்திருக்கறார்கள் என்று விமர்சனம் கூறுகிறது.
(இப்படத்தில்
எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை பார்த்து பாடிய ‘’திருவளர்
செல்வியோ நான் தேடிய தலைவியோ “ என்ற பாடல் வரிகள் பின்னாளில் அரசியலில் மெய்யானது).
30.12.1973 இதழில் சொல்லத்தான் நினைக்கிறேன் படவிமர்சனத்தில் பாலச்சந்தர் ஆல் ரவுண்ட் பாராட்டை பெறுகிறார். படத்தின் முடிவில் சிவகுமாருக்கு ஏற்படும் வெறுமை குறிப்பிடப்பட்டுள்ளது. (சொல்லாத காதல், வாய்பேசாத காதல், லெட்டர் காதல், ஃபோன் காதல், chat காதல் வகையறாக்களுக்கு பிள்ளையார் சுழி இப்படம்னு சொல்லலாமோ?🤔). சிவகுமார், ஜெயசித்ரா, ஶ்ரீவித்யா என அனைவரது நடிப்பும் பாராட்டிற்குரியது என கூறப்பட்டிருந்தாலும் சபாஷ் பெறுகிறார் இளம் நடிகர் கமல்ஹாசன் என அவரை ஊக்குவிக்கும் வகையில் ஹைலைட்டு செய்யப்பட்டுள்ளது. சிவகுமார் மேனேஜராக ஒரு ஜென்டில்மேனாக பக்காவாக நடித்திருப்பதாகவும், ஶ்ரீவித்யா நடிப்பில் சிகரம் தொட்டு விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
8.12.1974 இதழில் ஶ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர், லதா நடித்த உரிமைக்குரல் படத்தின் விமர்சனத்தில் விறுவிறுப்புக்கு தேவையான அம்சங்கள் நிறைந்திருக்கும் படமாக இது குறிப்பிடப்பட்டுள்ளது. சகஸரநாமத்தின் அமைதியான நடிப்பும், சண்டை காட்சிகள் அமைக்கப்பட்ட விதமும், ‘கல்யாண வளையோசை கொண்டு‘ , ‘விழியே கதை எழுது’ பாடலும் ஸ்பெஷல் மென்ஷன் பெறுகின்றன. ஒரு தெலுங்கு படத்தை ரீமேக் செய்துள்ள இயக்குனர் கதை திரைக்கதையிலும் மாற்றம் செய்யாமல் , ஆந்திர கிராமத்திலேயே படமாக்கி, எம்.ஜி.ஆரின் உடையிலும் மாற்றம் செய்யாததால் எம்.ஜி.ஆர் ஆந்திர விவசாயி போல் காட்சி அளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முத்தாய்ப்பாக ‘குரலில் உற்சாகமிருக்கிறது‘ என முடித்து படத்திற்கு பச்சை கொடி காட்டியுள்ளனர்.
(ஶ்ரீதர்
எம்.ஜி.ஆரை வைத்து 60 களில் தொடங்கிய படம் ‘அன்று சிந்திய ரத்தம்’. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடந்து நின்று போனது. அந்த படம் தான் பின்னாளில் சிவந்த மண் ஆக வெளிவந்தது . 70 களின் தொடக்கத்தில் ஶ்ரீதரின் சில தமிழ் மற்றும் ஹிந்தி படங்கள் தோல்வியடைந்து அவருக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது எம்.ஜி.ஆர் நீட்டிய உதவி கரம் தான் உரிமைக்குரல். இப்படத்தின் வெற்றி அடுத்த பதினைந்து ஆண்டுகள் ஒரு பெரிய ரவுண்ட் வர ஶ்ரீதருக்கு பெரிதும் துணை புரிந்தது.)
அடுத்த பகுதியிலிருந்து விகடன் விமர்சனங்களில் மார்க் போடும் காலம் தொடங்குகிறது. 70 களின் பிற்பகுதியில் வெளியான க்ளாஸிக் படங்களில் இருந்து மீண்டும் தொடருவோம்.
(நண்பர்களே ! விகடனில் வெளியான விமர்சனங்கள் விகடன் நிறுவனத்தின் Intellectual Property (IP) . அதை தவறாக பயன் படுத்தும் நோக்கம் எங்களுக்கு துளியும் இல்லை. அந்த விமர்சனங்களை குறித்த எங்கள் பார்வையே இந்த கட்டுரை)
2 comments
Click here for commentsSowcar pathina seidhigal....interesting...
ReplyTrue...I have always liked Sowcar's attitude, her personality, the way she carries herself. She deserved much more from the Industry.
ReplyVimarsanathin vimarsanam thavira sila pala nunukamaana thunukkugalayum serndhu aliththa ezhuthaalarin thagaval tharavuthalathai mechugiren.