விகடன் திரை விமர்சனங்கள் ஒரு பார்வை
பகுதி 3
vikatan thirai vimarsangal oru paarvai pagudhi 3
![]() |
விகடன் திரை விமர்சனங்கள் ஒரு பார்வை பகுதி #3 |
70-களின் கிளாசிக் படங்களை பற்றிய விகடனின் திரைவிமர்சனம் குறித்த ஒரு பார்வை !!!
70-களின் பிற்பகுதியில் விகடன் விமர்சனத்தில் படங்களுக்கு மார்க் போடும் வழக்கம் துவங்கியது. நம் Gen X மற்றும் Millenial kids கவனத்திற்கு- நான்அறிந்த விகடன் ஸ்கேல் இது தான்.
>= 50 - All time Classic / Cult படங்கள்
45 - 49 - தரமான கமர்ஷியல் படங்கள்
40 - 44 - Above Average கமர்ஷியல் படங்கள்
35 - 39 - சுமார் படங்கள். (இதில் பல ஹிட் படங்களும் அடங்கும்)
< 35 - உங்களுக்கே தெரியும்
14.8.1977 இதழில் வெளியானது கவிக்குயில் படத்தின் விமர்சனம். இந்த விமர்சனத்தில் ஒளிப்பதிவிலும், எடிட்டிங்கிலும் உள்ள குறைகளை ரொம்பவே டெக்னிக்கலாக அடிமட்டம் வரை போய் அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். இப்பொழுது YouTube-ல் ரெவ்யூ பண்ற பசங்களா, இதை எல்லாம் படிச்சு நோட் பண்ணி இந்த மாதிரி ரெவ்யூ பண்ணுங்கப்பா. இப்படத்திற்கு மொத்த மார்க் 360 /1000. இதில் இளம் இசையமைப்பாளர் இளையராஜா தான் மிக அதிகமாக 50 மார்க் வாங்கியுள்ளார். சின்ன கண்ணன் அழைக்கிறான் பாடலை பற்றி ஸ்பெஷல் மென்ஷன் செய்திருக்கிறார்கள்.
(நடிகை சுஜாதாவை தவிர்த்து அன்னக்கிளியின் வெற்றி கூட்டணி அப்படியே களமிறங்கிய படம் இது. இந்த டீமுடன் கவிக்குயிலில் இணைந்தனர் ஶ்ரீதேவியும் அவர் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த ஒரு இளம் நடிகரும். விகடனின் மதிப்பீடு மிக சரியாக அமைந்தது. படம் தோல்வி அடைந்தது. பிரபல சங்கீத மேதை பாலமுரளிகிருஷ்ணா தமிழில் பாடிய வெகு சில திரைப்பாடல்களில் ஒன்று சின்ன கண்ணன் அழைக்கிறான். All time classic ரகம். இப்படத்தின் தயாரிப்பாளர்/கதாசிரியர்/பாடலாசிரியர் திரு. பஞ்சு அருணாசலம். தமிழ் சினிமா கொண்டாட வேண்டிய மிகப்பெரிய திறமைசாலிகளில் ஒருவர். தன் சுயசரிதையான ‘திரைத்தொண்டர்’ நூலில் இப்படத்தை பற்றிய ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறார். கர்நாடகத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது இந்த படத்தில் ஶ்ரீதேவியின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த அந்த இளம் நடிகரை தன் அறைக்கு அழைத்து அமர சொல்ல, அவர் தரையில் அமர்ந்துவிட்டாராம். எவ்வளவு வற்புறுத்தியும் கேட்காமல் பணிவுடன் தரையிலேயே அமர்ந்த அந்த இளம் நடிகரின் பெயர் ரஜினி. பெயரை படித்ததும் உங்களுக்கு புல்லரித்திருந்தால் Trust me you are not alone my friend.
பஞ்சு அருணாசலம் போன்ற ஒரு Multi Talented திரைக்கலைஞரை இன்று பார்க்க முடியாது. அபூர்வ சகோதரர்கள் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணம் இவரது திரைக்கதை. ‘மணமகளே மணமகளே வா வா’, ‘பொன்னெழில் பூத்தது புது வானில்’, ‘காதலின் தீபம் ஒன்று’, ‘பட்டு வண்ண சேலைக்காரி’, ‘கொஞ்சி கொஞ்சி அலைகளாட’ என இவர் எழுதிய பல பாடல்கள் All Time Classics. ‘குரு சிஷ்யன்’ போன்ற காமெடி Genre படமும் ‘ஆறிலிருந்து அறுபது வரை’ என்ற சீரியஸ் படமும் இவர் கைவண்ணமே. இவர் தயாரித்த ‘மைக்கேல் மதன காமராஜன்’ போன்ற இன்னொரு படத்தை உருவாக்குவது கஷ்டம் . இவரின் சுயசரிதையான ‘திரை தொண்டர்’ எனக்கு மிகவும் பிடித்த நூல்களில் ஒன்று. தமிழ் சினிமா போற்ற வேண்டிய முக்கியமான பொக்கிஷங்களில் ஒருவர் பஞ்சு அருணாசலம் ).
1977-ம் அண்டு செப்டம்பர் மாதத்திற்கு பின்னர் வெளிவந்தது 16வயதினிலே விமர்சனம். படத்தின் மொத்த மார்க் 625/1000. நாம் பார்த்தவரை இந்த படத்திற்கே மிக அதிக மதிப்பெண். கமல் - 90, இயக்குனர் பாரதிராஜா - 70, இளையராஜா - 65, நிவாஸ்(ஒளிப்பதிவு)- 65, கலைமணி (வசனம்) - 60, ஶ்ரீதேவி - 60, பாஸ்கர்(எடிட்டிங்) - 50, ரஜினி - 50 ( என்னது ..நிஜமாவா...இன்னும் ஒரு 40 மார்க் வரனுமே🤔, revaluation இருக்கா ..?) இப்படி போகிறது பட்டியல். பாரதிராஜா, கமல், இளையராஜா ஆகியோர்க்கு அதிக பட்ச பாராட்டுக்கள் கொடுத்துள்ளனர். இது போல் நாலு படம் வந்தால், தமிழ் சினிமா தலை நிமிரும் என்று முடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளரை, எடிட்டரை பாராட்டினாலும் படத்தின் டெக்னிக்கல் குறைகளையும் சுட்டி காட்டியிருக்காங்க. குறிப்பா செந்துரப்பூவே பாடலில் ரெண்டு ஶ்ரீதேவி காண்பிக்கப்படும் போது ஏன் மாஸ்க் போட்டு எடுக்கலைன்னு உரிமையோட கோவப்பட்டிருக்காங்க (ஹலோ, அது கொரோனாவுக்கு போடற மாதிரி மாஸ்க் இல்லைங்க. கேமரால மாஸ்க் ஷாட் எடுக்கறதை பத்தி friends ).
(என்னை பொறுத்தவரை 16 வயதினிலே என்றதும் பாரதிராஜா, இளையராஜா, கமல், ரஜினி, கலைமணி, பாக்யராஜ் என பலர் பேசப்பட்டாலும் அதிகம் பேசப்படாத இருவர் கங்கை அமரன் மற்றும் மலேசியா வாசுதேவன். கங்கை அமரன் செந்தூரப்பூவே பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். ‘செவ்வந்தி பூ..’, ‘ ஆட்டுகுட்டி முட்டை,..’ என்ற கண்ணதாசனின் பாடல்களை பாடியவர் மலேசியா வாசுதேவன். இதற்கு முன் சிறு சிறு பாடல் பகுதியிலே அவர் பாடியிருந்தாலும் இந்த படத்தின் மூலமே அவர் வெளிச்சத்திற்கு வந்தார். SPB-யின் பல பாடல்களை மனோ பாடலாம் and vice versa. ஏன், யேசுதாஸின் சில பாடல்களை கூட SPB பாடினால் ஏற்று கொள்ளலாம். ஆனால் மலேசியா வாசுதேவன் பாடல்களை வேறொரு பாடகர் பாடுவதை ஏனோ நினைத்து கூட பார்க்க முடிவதில்லை. ‘பூங்காற்று திரும்புமா?,..’ என்ற வரிகளில் உள்ள ஏக்கமும் வலியும் நம்மை இன்றும் வாட்டுவதற்கு முக்கிய காரணம் மலேசியா வாசுதேவன். இந்த ‘பூங்காற்று திரும்புமா?,..’ moment இல்லாத வாழ்க்கை தான் ஏது? )
25.6.1978 இதழில் வெளிவந்த விமர்சனம் ஶ்ரீதரின் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’. மீண்டும் ஒரு ரஜினி-கமல் Face off. இந்த விமர்சனத்திலேயே ரஜினி-கமல் இருவரில் யார் பெட்டராக நடித்திருக்கிரார்கள் என்றால் ‘It’s a dead heat ‘ என குறிப்பிடப்பட்டுள்ளது. "என்னடி மீனாட்சி,.." பாடலுக்கு ஸ்பெஷல் மென்ஷன் உள்ளது. கதையின் பலவீனங்களும் டெக்னிக்கல் குறைபாடுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. படத்துக்கு 57.5 /100 மார்க் கொடுத்திருக்காங்க. படம் ஒரு Blockbuster.
(எனக்கு தெரிந்து இருபது ஆண்டு இடைவெளியில் generation gap-ஐ மீறி அந்த அந்த காலத்துக்கு ஏற்றார்போல் இரண்டு Youthfull ஆன blockbuster படங்களை கொடுத்தது இயக்குனர் ஶ்ரீதர் மட்டுமே. பாலச்சந்தர், பாரதிராஜா போன்றோரும் இந்த லிஸ்டில் வருவது சந்தேகமே. அதே போல் தமிழ் சினிமாவின் டாப் 3 Youthful Title லிஸ்டில் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ மற்றும் ‘ 16 வயதினிலே’ கண்டிப்பாக இடம்பெறும். மூன்றாவது என்னவாக இருக்கலாம்?
இப்படத்திற்கு MSV தான் இசையமைப்பதாக இருந்தது. அப்போது ஶ்ரீதரிடம் உதவி இயக்குனர்களாக இருந்த (சந்தான)பாரதி-(P)வாசு இருவரும் இளையராஜா இசையமைக்க ஶ்ரீதரை Convince செய்தனர். அதற்கு நன்றி கடனாக பாரதி-வாசு இணைந்து இயக்கிய முதல் படமான பன்னீர் புஷ்பங்கள் படத்திற்கு இசையமைத்த இளையராஜா பணம் வாங்கி கொள்ள மறுத்து விட்டார்.)
3.9.1978 இதழில் வெளிவந்த விமர்சனம் முள்ளும் மலரும். விமர்சனம் முழுக்க ரஜினியையும் மகேந்திரனையும் வகை வகையாக பாராட்டியிருக்காறார்கள். இதுவரை கதை வசனம் எழுதி வந்த மகேந்திரன் இயக்குனராகியிருக்கும் முதல் படம் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு மற்றும் இளையராஜாவின் இசையும் விசேஷமாக குறிப்பிட்டுள்ளனர். வசனமில்லாத அந்த உணர்வுபூர்வமான க்ளைமாக்ஸ் காட்சியும் அதற்கு இளையராஜாவின் வித்தியாசமான பிண்ணனி இசையும் ஹைலைட்டு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் தரம் இனி மகேந்திரன் இயக்கும் ஒவ்வொரு படத்திற்கும் எதிர்பார்க்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு மொத்த மார்க் 61 /100.
(முள்ளும் மலரும் படத்தில் பாலுமகேந்திராவை பரிந்துரை செய்தது கமல்ஹாசன். மகேந்திரனின் மற்ற அனைத்து படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தது அசோக்குமார். இப்படத்தின் தயாரிப்பாளர் வேணு செட்டியார் இப்படத்தை பார்த்து மகேந்திரன் மீது கடும் கோபத்தில் இருந்தார். அவநம்பிக்கையோடு படத்தை வெளியிட்டார். படம் கமர்ஷியலாக பெரிய வெற்றியை பெற்றது. பாசமலர், முள்ளும் மலரும், கிழக்குச் சீமையிலே வரிசையில் இன்னொரு அழுத்தமான அண்ணன்-தங்கை உறவை பறைசாற்றும் படம் இதுவரை வரவில்லை என்பதே உண்மை.)
19.11.1978 இதழில் வெளிவந்த விமர்சனம் சிகப்பு ரோஜாக்கள். நம்ம ஊர் மொந்தையில் அயல்நாட்டு ஸ்காட்ச் என வர்ணிக்கிறது விகடன். கமல் நடிப்பில் எங்கேயோ போய் கொண்டிருக்கிறார் என அப்போதே declare செய்துள்ளனர். 16 வயதினிலே ரவி வர்மா ஓவியம் என்றால், இது பாரதிராஜா வரைந்த மாடர்ன் ஆர்ட் என விமர்சனம் கூறுகிறது ( எளிமையான உவமை ). கமல் ஶ்ரீதேவியை நிஜமாகவே காதலித்தாரா என்ற தெளிவு திரைக்கதையில் இல்லை என்ற குறையை சுட்டி காட்டவும் தவறவில்லை. 16 வயதினலேவில் கமலுக்காக ஶ்ரீதேவி காத்திருப்பது அழுத்தமாக இருந்ததாகவும் ஆனால் அதே முடிவு இதில் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை எனவும் சொல்லியிருக்கிறார்கள்( அது சரி. பல தமிழ் படங்களில் ஹீரோ ஜெயிலுக்கு போக ஹீரோயின் காத்திருக்காங்க. ஒரு மாறுதலுக்கு ஹீரோயின் ஜெயிலுக்கு போக ஹீரோ காத்திருப்பது போல் கதை அமைந்த ரெண்டு படம் சொல்லுங்க . ஞாபகம் வரலைன்னா இந்த பக்கத்தின் முடிவில் சொல்லியிருக்கிறோம்). இப்படத்தின் மார்க் 53/100.
19.11.1978 இதழில் வெளிவந்த மற்றொரு விமர்சனம் பாலச்சந்தரின் தப்புத்தாளங்கள்( இது ஒரு Adults Only படம் ஆனால் கண்டிப்பாக ஆபாசமான படமல்ல). அடியாள் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சும் ஹீரோ மற்றும் விபச்சாரம் செய்யும் ஹீரோயின் பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்ட விதத்திற்கு பாலச்சந்தரை ஏகமாக பாராட்டியிருக்கின்றனர். சரிதாவின் நடிப்புக்கு ஸ்பெஷல் மென்ஷன் உண்டு. ஏனோ ரஜினி பற்றி பெரிதாக ஏதும் குறிப்பிடப்படவில்லை. விரசமான காட்சிகளை பாலச்சந்தர் கையாண்டுள்ள விதம் குறிப்பாக பாராட்டப்பட்டுள்ளது. இப்படத்தின் மார்க் 52/100.
(தமிழ் சினிமாவில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு முழு தகுதியிருந்தும் ஏதோ காரணங்களால் கிடைக்காமல் மிஸ் ஆன சில படங்களில் இதுவும் ஒன்று. அப்படி ஒரு தேர்ந்த நடிப்பை வழங்கியிருப்பார் சரிதா. இப்படி ஒரு கஷ்டமான பாத்திரத்தில் நடித்த போது சரிதாவின் வயது பதினெட்டு தான். அப்படி சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைக்காமல் மிஸ் ஆன மற்றுமோர் படம் ‘முதல் மரியாதை’. அப்படத்தில் நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுத்து ராதா நடித்த போது அவரது வயது இருபது தான். இப்படி ஶ்ரீதேவிக்கு தேசிய விருது கிடைக்காமல் மிஸ் ஆன படம் ‘மூன்றாம் பிறை’. அப்படத்தில் நடித்த போது அவரது வயது பத்தொன்பது தான். ஷோபா சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கிய ‘பசி’ படத்தில் நடித்த போது அவருக்கு வயது பதினேழு. நம்மை போன்ற பெரும்பாலான சாமானியர்களுக்கு இருபது வயதில் என்ன பெரிய Maturity இருந்து விட்டது. இந்த கோணத்தில் யோசித்தால் இவர்களின் திறமை அபாரமானது என உணரலாம்).
( நாம் மேலே கேட்ட கேள்விக்கு விடை- முதல் மரியாதை, அம்மன் கோவில் கிழக்காலே . ராதா ஜெயிலுக்கு போனாலே படம் ஹிட் என்ற செண்டிமெண்ட் உருவாகியிருக்குமோ 🤔 . ஏன் சின்ன கவுண்டர் படத்தை மறந்துட்டீங்க?)
அடுத்த பகுதி ஒரு ஆங்கில படத்தோடு தொடங்கும்.
விகடன் திரை விமர்சனங்கள் ஒரு பார்வை பகுதி 1 படிக்க 👇,
விகடன் திரை விமர்சனங்கள் ஒரு பார்வை பகுதி 2 படிக்க 👇,