விகடன் திரை விமர்சனங்கள் ஒரு பார்வை பகுதி 1
1964 முதல் 1974 வரையிலான விகடனின் திரை விமர்சனம் குறித்த ஒரு பார்வை !
இப்போதெல்லாம் படம் வெளியான சில மணி நேரங்களில் விமர்சனம், பப்ளிக் டாக், இண்டெர்வெல் ரெவ்யூ என படத்தின் விதி எழுதப்பட்டு விடுகிறது. 90 கள் வரை இருந்த நிலைமையே வேறு. ஒரு படம் வெளியாகி சில வாரங்கள் கழித்து தான் அப்படத்தின் விமர்சனம் பிரபல பத்திரிகைகளில் வெளிவரும். அது வரையில் 'word of the mouth ' லும், விளம்பரத்தினாலும், படங்கள் ரசிகர்களை ஈர்த்தன. பெரும்பாலும் அந்த விமர்சனங்கள் நடுநிலையோடு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவையாக இருந்தன. இதில் ஆனந்த விகடன் விமர்சனங்களுக்கு தனி மரியாதை இருந்தது.
80 களில் பள்ளி பருவத்தில் ஆனந்த விகடன் இதழ் வீட்டிற்கு வந்ததும் அந்த வார விமர்சனம் எந்த படத்திற்கு?, அதற்கு என்ன மார்க்?, தனக்கு பிடித்த நடிகர், நடிகை படத்திற்க்கு என்ன மார்க்? என பார்ப்பதில் ஒரு விசேஷ ஆர்வம் இருந்தது. தனக்கு பிடித்த படத்திற்க்கு நல்ல மார்க் வந்ததென்றால் பெற்றோர்களை கன்வின்ஸ் செய்து படம்பார்க்க கூட்டி செல்ல செய்வது கொஞ்சம் எளிது. 60, 70 களில் படங்களுக்கு மார்க் போடும் வழக்கம் இல்லை. மாறாக சேகர்-சந்தர் , முனிசாமி -மாணிக்கம் என்ற சாமானியர்கள் உரையாடுவது போலும், ராஜேஷ் கடிதம் மூலமாக லதாவிற்கு படம் பற்றி கூறுவது போலும் அமைந்திருக்கும். பிறகு 70 களின் பிற்பகுதியில் ஒவ்வொரு டிபார்ட்மேன்டிற்க்கும்
தனிதனியாக மார்க் போடுவது , 80 களில் மொத்தமாக மார்க் போடுவது, 90 களில் ஸ்டார் போடுவது என பல மாற்றங்கள் ஏற்பட்டன.
விகடனின் ஆரம்ப
காலம் முதல் வெளிவந்த துணுக்குகளின் தொகுப்புக்கள் பல வெளிவந்ததுண்டு. அது போல் விமர்சனங்களின் தொகுப்பும் வெளிவராதா என்ற நீண்டநாள் ஏக்கம் எனக்கு உண்டு. ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன் விகடன் தனது பழைய இதழ்களை மீண்டும் ‘பொக்கிஷம்’ என்ற பெயரில் வெளியிட்ட போது இந்த பொக்கிஷம் இதழ்களின் மூலம் பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த திரைப்பட விமர்சனங்களை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. முடிந்தவரை பல பொக்கிஷம் இதழ்களை பாதுகாத்ததன் மூலம் அவற்றில் வெளிவந்த பல மறக்கமுடியாத படங்களின் விமர்சனங்களை ஆராயும் முயற்சியே இது. கூடுமானவரை நமக்கு தெரிந்த கூடுதல் தகவல்களையும் கருத்துகளையும் ( ) போட்டு தெரிவித்துள்ளோம்.
விகடன்
நிறுவனம் ராஜூ, தாணு, கோபுலு, மதன் ஆகியோரின் பழைய துணுக்குகளை தொகுத்து வெளியிட்டதை போல் விகடன் விமர்சனங்களையும் தொகுத்து புத்தகமாக வெளியிட வேண்டும் என்பதே நமது கோரிக்கை. இனி 1964 முதல் வெளிவந்த சில விமர்சனங்களையும் அந்த படங்கள் பற்றிய கூடுதல் தகவல்களையும் பார்ப்போம்.
15.3.1964 இதழில்
தமிழின் எவர் கிரீன் காமெடி ‘காதலிக்க
நேரமில்லை’
படத்தின் விமர்சனம் வெளிவந்தது. தமிழில் கட்டிலும் கண்ணீரும் இருமலும் உறுமலும் இல்லாத படம்னு சொல்லி மொத்த டீமையும் ஏகத்துக்கு பாராட்டியிருக்காங்க.
பார்த்த முகங்களையே பார்ப்பதற்கு பதிலாக புது முகங்களை பார்ப்பது ஃபிரெஷ் ஆக இருக்குன்னு சொல்றாங்க விமர்சனத்தில். ஒளிப்பதிவாளர் வின்செண்டுக்கு அவரது வெளிப்புற காட்சிகளுக்காக ஸ்பெஷல் மென்ஷன் வேறு. MSV - கண்ணதாசனின் கைவண்ணத்தில் மெகா ஹிட்டடித்த பாடல்களை பற்றி ஏனோபெரிதாக சொல்லப்படவில்லை. நாம் எதிர்பார்த்தது போல் நாகேஷ் பாலைய்யாவிற்க்கு கதை சொல்லும் காட்சியை குறிப்பிட்டு அந்த காட்சியில் தியேட்டரே பைத்தியம் பிடித்தது போல் பெரிதாக சிரிப்பதாக குறிப்பிட்டுள்ளனர். படம் கடைசி அரை மணி நேரம் கொஞ்சம் இழுவையா இருக்கு என்றும் சொல்லியிருக்காங்க. கடைசியா இப்படி ஒரு நல்ல படத்தை கொடுத்ததுக்கு சித்ராலயா நிறுவனத்துக்கும் ஜெமினி கலர் லேப்பிற்க்கும் வாழ்த்து தெரிவிச்சிருக்காங்க விமர்சனத்தில்.
(ஒரு
விமர்சனத்தில் பிரிண்ட் போட்ட லேப்பை பாராட்டுவது அபூர்வம். அப்படி பாராட்ட காரணம் தமிழில் வெளி வந்த முதல் ஈஸ்ட்மேன் கலர் படம் இதுதான். ஆழியார் அணை, அதை சுற்றிய இயற்கை காட்சிகள், பசுமை, குளுமை என இந்த ஈஸ்ட்மேன் கலர் ரசிகர்களை கிறங்கடித்தது. இப்படத்தின் வெளிப்புற காட்சிகள் மற்றும் ஒளிப்பதிவுக்காகவே படத்தை பலமுறை பார்த்தவர்கள் ஏராளம். காஞ்சனாவும் ராஜஶ்ரீயும் எஸ்டேட் பங்களாவுக்குள் காரில் நுழையும் போது காரோடு, கேமராவும் வளைந்து வளைந்து பயணிப்பதும், மாடி மேலே மாடி கட்டி பாடலில் படம் பார்ப்பவர்கள் மேல் தண்ணீர்
விழுவது போன்ற காட்சி அமைப்பும், முத்துராமன் வருவதை பார்த்து கைகுட்டையை ஆட்டியபடியே ரவிச்சந்திரன் ஓடி வரும் காட்சி , கார் வீல் பிளேட்டில் டயருக்கு காற்றடிக்கும் ரவிச்சந்திரனின் முகத்தை காட்டுவது என ஒளிப்பதிவில் அசத்தியிருப்பார் வின்செண்ட். இந்த வின்சென்ட் என்னும் ஒளிப்பதிவு மேதை இதற்கு முந்தைய ஶ்ரீதரின் படங்களிலும் தனி முத்திரை பதித்திருப்பார். குறிப்பாக நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் சொன்னது நீதானா பாடலில் கட்டிலின் மேல் அமர்ந்திருக்கும் முத்துராமனை focus செய்யும் கேமிரா , அப்படியே கட்டில் கீழ் இறங்கி, கட்டிலுக்கடியில் ஊடுருவி கட்டிலுக்கு இன்னொருபறம் அமர்ந்திருக்கும் தேவிகாவை focus செய்யும் ஒரே ஷாட்டில். இந்த காட்சியை இப்பொழுது பார்த்தாலும் ஆச்சரியம் ஏற்படும் நமக்கு.
இப்படத்தை
பற்றி சிலாகித்து சொல்ல பல விஷயங்கள் உண்டு. சில செய்திகள் மட்டும் இங்கே குறிப்பிடுவோம். இப்படத்தின் கதை, திரைக்கதை ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு யோசிக்கப்பட்டதல்ல. மெரினா பீச்சருகே ஶ்ரீதரின் ஸ்டாண்டர்டு ஹெரால்டு காரில் அமர்ந்து கொண்டு ஶ்ரீதரும் சித்ராலயா கோபுவும் சுண்டல் சாப்பிட்டு கொண்டே முடிவு செய்தது தான்.
இப்படத்தின்
பாடல் கம்போசிங்க்கு முன் சில வாரங்களாக கண்ணதாசனும் MSV யும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு ஏற்படவில்லை. இந்த சிறிய இடைவேளையை குறிப்பிடும் வகையில் கண்ணதாசன் எழுதியது தான் ‘விஸ்வநாதன் வேலை வேண்டும்’. இந்த வரிகளை பார்த்தே பாலைய்யா கேரக்டருக்கு விஸ்வநாதன் என பெயர் வைக்கப்பட்டது.
நம்ம
ஊர் கதாநாயகிகள் பலர் Air hostess ஆக நடித்ததுண்டு. ஆனால் நிஜத்தில் Air
hostess ஆக இருந்து பின்னர் கதாநாயகியாக நடித்தவர் அனேகமாக இப்படத்தின் கதாநாயகி காஞ்சனா மட்டுமே. ஒரு விமான பயணத்தில் இவரை சந்தித்த ஶ்ரீதர் இவரை கதாநாயகியாக்கினார். அறிமுகமான இப்படத்திற்க்கு பிறகு காஞ்சனா பல மொழிகளில் மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட திரைபடங்களில் நடித்தார் .).
18.10.1964 இதழில்
எம்ஜிஆர்-தேவர் பிலிம்ஸ் கலவையில் வெளிவந்த ‘தொழிலாளி’
படத்தை பற்றி சாமானியர்கள் மாணிக்கமும்-முனுசாமியும் விவாதிக்கையில் எம்ஜிஆர் கண்டக்டராக இயல்பாவே ‘ரைட்’ சொல்றார் என்று பாராட்டராங்க. ‘இந்த நம்பியார் ஏண்ணே எப்ப பார்த்தாலும் திட்டம் போட்டுட்டே இருக்காரு?’ என்று முனுசாமி கேட்க அதுக்கு மாணிக்கம் ‘ அவர் வில்லன்னு மட்டும் தான் அவர்கிட்ட சொல்லீருக்காங்க ஆனால் எதுக்கு வில்லன் என்ற நோக்கத்தை சொல்லாமலே விட்டுடாங்க ‘ என்று அந்த பாத்திரத்தின் பலவீனத்தை நகைச்சுவையாக பதிவு செய்கின்றனர். புதுமுகம் ரத்னா கூச்சப்படாம ஃப்ரீயா நடிச்சிருக்காங்கன்னும்
கே.ஆர். விஜயாவின் நடிப்பு ஒரு கட்டத்துக்கு மேல் செயற்கையாக இருப்பதாகவும் சொல்லியிருக்காங்க. கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தா நல்ல வெற்றியை பெற்றிருக்கலாம் ன்னு முடிச்சிருக்காங்க.
(இப்படத்தின்
வசனகர்ததா ‘கலை வித்தகர்’ ஆரூர்தாஸ் அவர்கள். தமிழ் சினிமா கொண்டாட வேண்டிய பொக்கிஷங்களில் ஒருவர். பாசமலர், அன்பே வா, வேட்டைக்காரன், பெற்றால் தான் பிள்ளையா, தெய்வ மகன், வெள்ளி கிழமை விரதம், பத்ரகாளி, விதி, இது தான்டா போலீஸ், வைஜெயந்தி ஐபிஎஸ், வடிவேலு நடித்த தெனாலி ராமன் என 65 ஆண்டுகளாக ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதியவர். இவர் வசனம் எழுதிய விதி படம் நீதிமன்ற காட்சிகளுக்காகவே நூறு நாட்கள் ஓடியது. நடிகர் திலகத்துக்கு அதிகமான படங்கள் வசனம் எழுதியவர் ( 27 படங்கள்) என்ற பெருமை இவரையே சாரும்.இன்றும் 89 வயதில் எழுத்து பணியை தொடர்பவர் ஆரூர் தாஸ். இவர் எழுதிய ‘நாற்பது இயக்குனர்களும் நானும்’ எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களில் ஒன்று.)
22.11.64 இதழில்
நடிகர் திலகத்தின் நூறாவது படமான ‘நவராத்திரி’
பற்றி சாமானியர்கள் சேகரும்-சந்தரும் பேசறப்போ நடிகர் திலகத்தை ஏகத்துக்கும் பாராட்டிட்டு அவரின் ஒன்பது பாத்திரத்துக்கு இணையா சாவித்திரி அருமையா நடிச்சிருக்காங்கன்னு
அழுத்தமா பதிவு செய்யறாங்க. சில பாத்திரங்கள் சரியா எடுபடலைன்னும் குறிப்பிடறாங்க ( தசாவதாரத்திற்கும் இதே விமர்சனம் எழுந்தது 45 வருடங்கள் கழித்து). இசை சிறப்பா இல்லைன்னும் சரியா சொல்லியிருக்காங்க. இறுதி காட்சியில் காணாமல் போன சாவித்திரியும் காதலன் சிவாஜியும் மீண்டும் சந்திக்கும் போது வார்த்தைகள் இல்லாமல் கண்களாலேயே பேசி அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கின்றனர்
என்றும் குறிப்பிடறாங்க விமர்சனத்தில்.
(இன்றும்
நடிகர் திலகத்தின் டாப் 100 பாடல்களில் நவராத்திரி பட பாடல்கள் இடம்பெறுமா என்பது சந்தேகமே. இந்த படம் நல்ல பெயர் வாங்கி தந்தாலும் வெற்றி படமாக அமையவில்லை. தமிழ் ஹீராக்களின் நூறாவது படம் வெற்றி பெறாது என்ற செண்டிமென்ட் துவங்கியது இந்த படத்தில் தான். இந்த சென்டிமென்டை உடைத்த ஒரே நடிகர் விஜயகாந்த் தான். படம் கேப்டன் பிராபகரன். நவராத்திரி என்ற சமூக படத்தை இயக்கியவர் சரித்திர படங்கள் எடுத்து புகழ் பெற்ற ஏ.பி. நாகராஜன். இந்த படத்திற்க்கு பிறகு அவர் இயக்கிய திருவிளையாடல் படத்தின் மூலமாக தனது சரித்திர பட வரிசையை துவக்கினார். நவராத்திரி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாகேஸ்வர ராவும் ஹிந்தி பதிப்பில் சஞ்சீவ் குமாரும் நடித்தனர். இந்த படத்தை இன்று ரீமேக் செய்தால் நடிகர் திலகத்தின் பாத்திரத்தில் கமலை நடிக்க வைக்கலாம். சாவித்திரியை போல் நடிக்க யாரால் முடியும்.......அதான் கீர்த்தி சுரேஷ் இருக்காங்களே..ஹலோ, யாருப்பா அது...?!)
இதழில்
ஶ்ரீதரின் வெண்ணிற ஆடை-யை விமர்சனம் செய்த சந்தரும்-சேகரும் புது முயற்சின்னு பாராட்டினாலும் கதை ரொம்ப சின்னதுன்னு குறிப்பிடறாங்க. மூன்று புதுமுகங்களிலும் ஜெயலலிதா அவர்களின் நடிப்பே ஏ-ஓன்னு குறிப்பிடறாங்க. இரண்டு பாடல் தவிர மற்ற பாடல்கள் வெளியே வந்து ஹம் பண்ணும் அளவு இல்லைன்னு சொல்லியிருக்காங்க. இப்படத்தின் முடிவு செயற்கைதனமா இருக்கறதாவும் குறிப்பிடறாங்க.
( ஶ்ரீதர்
படங்களின் அளவுகோல் படி இப்படம் மிக பெரிய வெற்றி படமில்லை. வெங்கட்ராமன் என்பவர் American
Consulate-ல் வேலை பார்த்து கொண்டே தனது ரூம் மேட்டுகள்
குண்டு ராவ் மற்றும் ரங்கராஜனோடு சேர்ந்து சினிமா வாய்ப்பு தேடி கொண்டு நாடகத்தில் நடித்து கொண்டிருந்தார். இந்த படம் அவருக்கு நல்ல பிரேக்கை தந்தது. ஆம். அந்த வெங்கட்ராமன் தான் திரையில் ஶ்ரீகாந்த் ஆனார். அந்த ரூம் மேட் இருவரும் என்ன ஆனார்கள் என்று நீங்கள் கேட்கவில்லை என்றாலும் நானே சொல்கிறேன். அந்த குண்டு ராவ் திரையில் நாகேஷ் ஆனார். ரங்கராஜனோ வாலி ஆனார். ஆனால் இவர்கள் இருவரும் ஶ்ரீகாந்திற்கு முன்னரே திரைத்துறையில் பிரபலமடைந்தனர் ).
அடுத்த
பகுதியில் மக்கள் திலகத்தின் நூறாவது படமான ஒளிவிளக்கில் இருந்து தொடங்குவோம்.
(நண்பர்களே, விகடனில் வெளியான விமர்சனங்கள் விகடன் நிறுவனத்தின் Intellectual Property (IP). அதை தவறாக பயன்படுத்தும் நோக்கம் எங்களுக்கு துளியும் இல்லை. அந்த விமர்சனங்களை குறித்த எங்கள் பார்வையே இந்த கட்டுரை)