விகடன் திரை விமர்சனங்கள் ஒரு பார்வை பகுதி 4
vikatan thirai vimarsangal oru paarvai pagudhi 4
![]() |
விகடன் திரை விமர்சனங்கள் ஒரு பார்வை பகுதி 4 |
70-களின் கிளாசிக் படங்களை பற்றிய விகடனின் திரைவிமர்சனம் குறித்த ஒரு பார்வை !!!
14.1.1979 இதழில் Star Wars படத்தின் விமர்சனம் வெளியாகி உள்ளது. இப்படத்தின் பட்ஜெட் பத்து கோடி என்றும், லாபம் 220 கோடி என்றும் பிரமிப்பாக கூறும் அதே வேளையில் இப்படத்தின் கதை வழக்கமான ஹீரோ-வில்லன் கதை தான் என விமர்சனம் கூறுகிறது. இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஸ்பெஷல் எபெக்ட்ஸ் ’ காட்சிகள் என்றும், க்ளைமாக்ஸ் காட்சி முடியும் போது வேற்று கிரகத்திற்கு போய் வந்த உணர்வு ஏற்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர். ‘Death star’ கிரகம் அழிந்தாலும் வில்லன்கள் தப்பி விடுவதால் இரண்டாம் பாகம் வெளிவரும் என குறிப்பிடுகின்றனர். எந்த கேரக்டர் பெயரும் குறிப்பிடாமல் அவர்களை விவரிக்கின்றனர். Chewbacca குரங்கு மனிதர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குனர் 33 வயதான George Lucas என்றும் எடிட்டர் அவர் மனைவி Marcia Lucas என்ற விவரமும் தரப்பட்டுள்ளது.
(இந்த
படம் 1977 மே மாதம் அமெரிக்காவில் வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் தான் இந்தியாவில் வெளியாகி உள்ளது. இன்று ஹாலிவுட் படங்கள் அமெரிக்காவில் வெளியாகும் அதே நாளில் இங்கேயும் வெளிவந்து விடுகின்றன. Avengers
Endgame படத்திற்கு
காலை நான்கு மணி காட்சி கூட நடத்திவிட்டோம். விரைவில்
ஹாலிவுட் ஹீரோக்களுக்கும் பட்டம் கொடுத்து பாலாபிஷேகம் செய்து ‘கலிஃபோர்னியாவின் வருங்கால கவர்னரே..! வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் !’ என்று போஸ்டரும் அடித்து விடுவோம்.)
Lucas மனைவி
Marcia-வுக்கு இப்படத்திற்கு எடிட்டிங் பிரிவில் ஆஸ்கார் விருது கிடைத்தது. 80-களின் மத்தியில் இருவரும் பிரிய நேரிட்டது. விவாகரத்தின் போது ஜீவனாம்சமாக ஒரு பெரிய தொகை Marcia-வுக்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் Lucas-க்கு ஏற்பட்டது. இந்த கைசெலவுக்கு பணம் வேண்டும் என்பதால் தன்னுடைய Lucas films-ல் Special
Effects செய்து
கொண்டிருந்த குழுவை இன்னொருவருக்கு விற்று விட்டார். அதை வாங்கியவருக்கும் சினிமாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அப்படி வாங்கியவரை அப்போது சற்று வித்தியாசமாகவும் ஆர்வமாகவும் பார்த்தது ஹாலிவுட் . அப்படி வாங்கியவர் சும்மா இல்லாமல், அந்த சிறு குழுவுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து மேலும் புதுமையான விஷயங்களை செய்ய உற்சாகப்படுத்தினார்.
அந்த சிறு குழு தான் இன்று Pixar. Lucas இடமிருந்து வாங்கிய நபர் Apple நிறுவனத்தை தொடங்கிய Steve Jobs.
Lucas ஒரு கட்டத்துக்கு மேல் தனது தயாரிப்பு நிறுவனத்தையே Disney-யிடம் விற்று விட்டார். அதனால் தான் சமீப காலங்களில் Disney ,
StarWars படங்களை
தயாரிக்கிறது.
Steve Jobs மறைவுக்கு
பிறகு Pixar நிறுவனத்தையும்
Disney வாங்கியது
தனி கதை. இன்று அமெரிக்காவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் George Lucas.
இந்த
Lucas உருவாக்கிய
மற்றுமோர் மறக்க முடியாத பாத்திரம் Indiana
Jones. ஆக்ஷன் ஹீரோ என்றால் போலீஸாகவோ அல்லது தாதாவாகவோ தான் இருக்க முடியும் என நாம் இன்றும் நம்பிக்கொண்டிருக்க,
1981-லேயே ஒரு
தொல்லியல் துறை பேராசிரியரை ஆக்ஷன் ஹீராவாக்கிய பெருமை Lucas-யே சாரும். இந்த கதாபாத்திரத்தை மக்கள் மனதில் நிலைநிறுத்தியவர்கள்
Steven Spielberg மற்றும்
Harrison Ford.
1977 இல் பத்து கோடி பட்ஜெட்தானா? இப்போ நாம ட்ரெய்லர் எடுக்கவே அவ்ளோ செலவு பண்றோமேன்னு யோசிச்சீங்கனா சிறு கணக்கு சொல்றேன். அந்த கால கட்டத்தில் ஒரு சராசரி தமிழ் படத்தின் பட்ஜெட் ஐந்து முதல் பத்து லட்சம் தான். தமிழ் பட வரலாற்றிலேயே மிகவும் தரமான படங்களில் ஒன்றான 16 வயதினிலே ஐந்து லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. 1994-ல் வெளியான நாட்டாமை படத்தின் பட்ஜெட் ஐம்பத்தி ஐந்து லட்சம் மட்டுமே. இப்படி அளவாகவும் யதார்த்தமாகவும் யோசித்து ஆரோக்கியமாக இருந்த தமிழ் சினிமா ஹாலிவுட் ரேஞ்சுக்கு என்று யோசித்ததன் விளைவு இன்று வரவு எட்டணா செலவு பத்தணா நிலைமையில் உள்ளோம்.
4.11.1979 இதழில் உதிரிப் பூக்கள் பட விமர்சனம் வெளிவந்தது. அனைத்து நடிகர்களையும் தொழில்நுட்ப கலைஞர்களையும் வெகுவாக புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். அந்த குழந்தை நட்சத்திரங்களுக்கு திருஷ்டி சுத்தி போடனும் என்றும், அந்த குழந்தைகளை தியேட்டரிலேயே தனியே விட்டுவிட்டு வந்த உணர்வு ஏற்படுகிறது என்றும் குறிப்பிடுகின்றனர். மகேந்திரன் முள்ளும் மலரும் படத்தின் விமர்சனத்தில் கூறியதற்கு ஏற்ப மற்றுமொரு தரமான படத்தை தந்திருக்கிறார் என பாராட்டியதோடு அவர் மேலும் நல்ல படங்களை தரவேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் ‘ காலம் கனிந்து இருக்கிறது மகேந்திர வர்மரே உங்கள் சாம்ராஜ்யத்தை மேலும் விரிவு படுத்துங்கள்’ என்று முடித்திருக்கின்றனர். படத்தின் மார்க் 60/100.
( இந்த
விஷயத்தில் விகடனின் ஆசை பொய்த்து போனது தமிழ் சினிமாவின் துரதிர்ஷடமே. இந்த படத்திற்கு பிறகு மகேந்திரன் எந்த
ஒரு க்ளாஸிக் படத்தையும் இயக்கவில்லை என்பது வருத்தமான விஷயம். ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே போன்ற ஓரளவு வெற்றி படங்களை மட்டுமே கொடுத்தார். ஆனாலும் இவரது படங்களின் பாதிப்பால் ஊரிலிருந்து சென்னைக்கு வந்து இயக்குனர் ஆனவர்கள் ஏராளம். நான் உதிரிப்பூக்கள் போல் படமெடுத்தால் ஒரு இயக்குனராக ரொம்பவே
சந்தோஷப்படுவேன்
என கூறியவர் மணிரத்னம். 1986 ஆம் ஆண்டிற்கு பிறகு மகேந்திரன் இயக்கியது மொத்தம் இரண்டு படங்களே !! )
2.8.1981 இதழில் வெளியானது அலைகள் ஓய்வதில்லை பட விமர்சனம். ஒரு பழைய கதைக்கு புதிய முடிவை கொடுத்திருக்கும் படம் என்கிறது விமர்சனம். இறுதியில் கதாநாயகனும் கதாநாயகியும் பூணூலையும் சிலுவையையும் அகற்றும் முடிவு ஏற்கக்கூடியதே என்கிறது விமர்சனம். கார்த்திக், ராதா இருவரின் நடிப்பும், மணிவண்ணனின் வசனமும், இளையராஜாவின் இசையும் ஸ்பெஷல் மென்ஷன் பெறுகின்றன. தியாகராஜனின் கதாபாத்திரம் பலவீனமாக உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தின் மார்க் 50+/100.
(இப்படத்தின் கதை மணிவண்ணனுடையது. பாரதிராஜா தனது பெரும்பாலான படங்களில் பிறரது கதை வசனத்தை வைத்தே படங்களை இயக்கி இருப்பார். ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என போட்டுக் கொள்வதில் எல்லாம் பாரதிராஜா ஆர்வம் காட்டியதில்லை. ஒரு கதையை கற்பனை செய்து காகிதத்தில் எழுதுவது ஒரு வித திறமை. அதே கதையை Visualize செய்து அதை திரையில் சொல்வது முற்றிலும் வேறொரு திறமை. தேர்ந்தெடுத்த கதையை முழுதும் உள்வாங்கி அதற்கு ஒரு திரை வடிவம் கொடுப்பதே ஒரு இயக்குனரின் பணி என்ற தெளிவு இருந்தது பாரதிராஜாவிடம். ராஜேஷ்வர், கலைஞானம், கலைமணி , மணிவண்ணன், பாக்யராஜ், செல்வராஜ், ரத்தின குமார் போன்ற பல கதாசிரியர்களின் கதைகளை திரையில் நிஜமாக்கினார் பாரதிராஜா. தமிழ் சினிமாவின் மிக சிறந்த ஆளுமைகளில் ஒருவரான பாரதிராஜா, கதாசிரியர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இன்றைய இயக்குனர்களுக்கு ஒரு முக்கிய பாடம்.
இப்படத்தில்
ராதாவை கார்த்திக்கும் நண்பர்களும் சேர்ந்நு கலாய்த்து பாடும் பாப்புலர் பாடல் ‘வாடி என் கப்ப கிழங்கே..’. கங்கை அமரன் எழுதிய இவ்வரிகளுக்கு என்ன அர்த்தம் என்று கங்கை அமரனிடம் எம்ஜிஆர் கேட்டதாக ஒரு தகவல் உண்டு. இந்த கலாய்க்கும் Genre பாடல்களை தொகுத்து ஒரு blog போடலாமோ🤔..)
8.11.1981 இதழில்
வெளியானது அந்த ஏழு நாட்கள் விமர்சனம். வேட்டி ஒரு கையிலும், ஹார்மோனிய பெட்டி ஒரு கையிலுமாக பாக்யராஜை தவிர வேறு யாராலும் படம் முழுக்க சிரிக்க வைக்க முடியாது என்கிறது விமர்சனம்.
பாக்யராஜ் குளிக்கும் காட்சியும், அம்பிகா குளிக்கும் போது பாக்யராஜ் பந்துவராளி ராகத்தை விளக்கும் காட்சியும் ஸ்பெஷல் மென்ஷன் பெறுகின்றன.பாக்யராஜின் ஃபேமஸ் க்ளைமாக்ஸ் டையலாக்குகளும், சிறுவன் காஜா ஷெரீஃப்பும் Highlight செய்யபட்டுள்ளனர். எம்எஸ்வீயின்
இசைக்கும் ஸ்பெஷல் மென்ஷன் உண்டு. படத்தின் மார்க் 58/100.
(அந்த
ஏழு நாட்கள் கதைக்கு Inspiration நடிகர் சந்திரபாபு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம். மலையாளம் பேசும் இசை கலைஞரான பாக்யராஜ் கேரக்டருக்கு
Inspiration கொஞ்சம்
மலையாள வாசனையோடு தமிழ் பேசும் இசையமிப்பாளர் MSV. இந்த படத்தின் பாடல் ரிக்கார்டிங் போது பாக்யராஜின் கேரக்டர் முழு வடிவம் பெறவில்லை. பாடல் Discussion போது MSV-ன் mannerism பிடித்து போக அதை உள்வாங்கி தனது கேரக்டரை வடிவமைத்தார் பாக்யராஜ். எதை எங்கே எப்படி சேர்க்கனும் என்ற வித்தை தெரிந்தவர் அல்லவா பாக்யராஜ். அனேகமாக பாக்யராஜின் அனைத்து படங்களுமே ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு ஹிட் அடித்துள்ளன. மௌன கீதம் ( Ek hi Bool
), அந்த ஏழு நாட்கள்( Woh Saat
Din), தூறல் நின்னு போச்சு( Mohabbat), முந்தானை முடிச்சு( Masterji),
எங்க சின்ன ராசா ( Beta), அவசர போலீஸ் 100( Gopi
Kishan), சுந்தர
காண்டம்(
Andaz), ராசுகுட்டி(Raja
Babu), வீட்டில
விசேஷங்க(
Mr.Bechera), வேட்டிய
மடிச்சு கட்டு( Papa the
great) என பட்டியல் நீளமானது. மேற்சொன்ன படங்கள் பலவும் கன்னடம், தெலுங்கிலும் ரீமேக் செய்யபட்டன. பாக்யராஜ் எழுதி பாரதிராஜா இயக்கிய ‘ஒரு கைதியின் டைரி’ படத்தை பாக்யராஜே ஹிந்தியில் ‘Aakhri Rasta’
என அமிதாப்பை வைத்து இயக்கி வெற்றி பெற்றார். பாக்யராஜ் எழுதிய ‘தாய்குலமே தாய்குலமே’ படம் ‘Gharwali
Baharwali’ என ரீமேக்காகி ஹிட்டடித்தது. ஒரு இயக்குனர், நடிகர் என்பதையெல்லாம் தாண்டி ஒரு கதை வசனகர்த்தாவாக பாக்யராஜ் போல் அகில இந்திய அளவில் வெற்றி பெற்றவர்கள் ஒரு சிலரே. இந்திய திரைபட உலகமே போற்ற பட வேண்டிய பொக்கிஷம் பாக்யராஜ். )
அடுத்த பகுதியில் வாழ்வே மாயத்தோடு தொடங்குவோம் !!!
விகடன் திரை விமர்சனங்கள் ஒரு பார்வை பகுதி 3 படிக்க 👇,
1 comments:
Click here for commentsvery nice