கோழி கிறுக்கல்

கோழி கிறுக்கல்

கோழி கிறுக்கல் - நீல சரித்திரம் பகுதி 3 / kozhikirukkal - Neela Sarithiram Episode 3

                

கோழி கிறுக்கல் - நீல சரித்திரம் பகுதி 3


 kozhikirukkal - Neela Sarithiram Episode 3  


jeans denim history , jeans denim history in tamil , kozhi kirukkal , jeans color dye , neela sarithiram , history of jeans pant . Indigo color
கோழி கிறுக்கல் - நீல சரித்திரம் பகுதி 3

 

    அமெரிக்கா என்ற நாடு கடந்த நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக புலம் பெயர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்டு, வல்லரசாக வளர்ச்சியடைய செய்யப்பட்டது என்றால் அது மிகையாகாது. பதினெட்டு, பத்தொன்பதாம்  நூற்றாண்டுகளில்  இங்கு புலம் பெயருதல் என்னும் போக்கு உச்சத்தை அடைந்திருந்தது. அது இன்றும் தொடர்வதை நாம் காணலாம். அந்த கால கட்டங்களில் ஐரோப்பாவில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களே அதிகம்ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா என்னும் புதிய தேசத்திற்கு  ஏறக்குறைய இரண்டு கோடி மக்கள்  பத்தொன்பதாம் நூற்றாண்டில் மட்டுமே புலம் பெயர்ந்து சென்றனர்


    இன்று உலகின் வளர்ந்த நாடுகளின் பட்டியலை எடுத்து பார்த்தால் ஏகப்பட்ட ஐரோப்பிய நாடுகள் அதில் இருக்கும். ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிலை வேறு. அந்தக் கால கட்டத்தில் ஐரோப்பாவில் போர் என்பது தொடர்கதையாக இருந்தது. பிரெஞ்சு பேரரசர்  நெப்போலியன் வேறு தினமும் ஆஃபீஸ் போவது போல் போர்க்களத்திற்கு போய் கொண்டிருந்தார். அவர் சிறைபடுத்தபட்ட பின் கொஞ்சம் அமைதி நிலவியது . ஆனால் பல நாடுகளில் பஞ்சமும் நிலவியது. ஐயர்லாந்து நாட்டில் 1840-களில் நிலவிய பஞ்சத்தில் ( Potato Famine என்று அழைப்பார்கள் ) குறைந்தது பத்து லட்சம் மக்கள் உயிரிழந்தனர். மற்றுமோர் பத்து லட்சம் பேர் அமெரிக்காவிற்கு கப்பலேறினர். இதெல்லாம் நடந்தது சில ஆண்டுகளுக்குள். ஜெர்மனியின் தெற்கு பகுதியில் பயிர்கள் பொய்த்து போக கணிசமானோர் அமெரிக்கா பக்கம் திரும்பினர்.

 

    அமெரிக்காவிற்கு பெருமளவில்  குடி பெயர்ந்த மற்றுமோர் சமூகம் யூதர் ( Jews ) சமூகம். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரால் லட்சக்கணக்கில் யூதர்கள் கொல்லப்பட்டதை  நாம் அறிவோம். ஆனால் அதற்கு முன்னரும் ஐரோப்பாவில் யூதர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர் என்பதே வரலாற்று உண்மை. ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு புலம் பெயர்ந்த யூதர்கள் ஐரோப்பா முழுதும் பரவியிருந்தனர் . மேற்கு ஐரோப்பாவில் ஓரளவு நிம்மதியாகவும் வசதியாகவும் இருந்தனர். பலர் படிப்பறிவு பெற்று அரசாங்க வேலையிலும், வர்த்தகர்களகவும் இருந்தனர். ஆனால் போலந்திலும், ரஷ்யாவிலும் அடக்குமுறைகளால் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர். அவர்கள் வாழ்க்கை தரம் சமுதாயத்தின் அடி மட்டத்திலிருந்தது. இன்று நாம் Negative Context-ல் பயன்படுத்த படும் Ghetto என்ற வார்த்தை முதன் முதலில் ஐரோப்பாவில் யூதர்கள் வாழும் பகுதியை அல்லது குடியிருப்பை குறிக்கவே பயன்படுத்த பட்டது. இவர்கள் தையல் தொழில், செருப்பு தைக்கும் தொழில் போன்ற கைத்தொழில்களில் வல்லவர்களாக இருந்தனர். இந்த அடக்குமுறைகளிலிருந்து விடு பெற இவர்கள் தேர்ந்தெடுத்தது அமெரிக்காவை


    ஐரோப்பியர்கள் அமெரிக்காவில் குடியேற இன்னொரு முக்கியமான காரணம் ஜனநாயகம் என்னும் புதிய காற்று. அந்த காலகட்டத்தில் ஐரோப்பாவில் பெரும்பாலும் மன்னராட்சியே நிலவியது. மன்னர்களின் அரசாங்கமும் மதமும் பின்னி பிணைந்தே இருந்தனஅமெரிக்காவில் பொதுவான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தங்கள் இஷ்டம் போல், சுதந்திரமாக வாழலாம் என்பது அந்த காலகட்டத்தில் ரொம்பவே புதுசு. இந்த Liberal சிந்தனையோடு தொழில் வளர்ச்சியும் சேர்ந்து கொண்டது அமெரிக்காவில் . உதாரணமாக 1830-ல்  வெறும்  25 மைல் தொலைவே அமெரிக்காவில் ரயில் பாதை இருந்தது. இது 1890-ல் 129000 மைல்களுக்கு அதிகமாக இருந்தது ( ஒரு மைல் என்பது 1.6 கி.மீ)


இதே காலக் கட்டத்தில் உலகின் பிற பகுதிகளிலும் புலம் பெயர்தல் நடந்து கொண்டருந்தது. குறிப்பாக



  1. British அரசாங்கம் தங்கள் புதிய காலனிகளில் கூலி வேலை செய்ய லட்சக்கணக்கான இந்தியர்களை வற்புறுத்தி உலகின் பல பகுதிகளுக்கு புலம்பெற செய்தது.
  2. அப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவிற்கு கருப்பர்களை அடிமைகளாக அனுப்பிய அடிமை வர்த்தகம்( Slave Trade ).


              இப்படி உலகெங்கிலும் புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கை தரத்தை நிர்ணயித்தது அவர்களின் தோலின் நிறமே என்பது மனித சமுதாயம் வெட்கி தலை குனிய வேண்டிய விஷயங்களில் ஒன்று. அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த வெள்ளை நிறத்தவர்கள் பெரும்பாலும் நில உரிமையாளர்களாகவும், கௌரவமான தொழில் செய்பவர்களாகவும் வாய்ப்புகளை பெற்றனர். ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு அமெரிக்கா அரசாங்கம் பண்ணை அமைத்து விவசாயம் செய்வதற்கு இலவசமாக நிலங்களை வழங்கியது. அதாவது ஒரு விவசாய குடும்பத்திற்கே நூற்று கணக்கான ஏக்கர்கள் வழங்கப்பட்டன. இப்படி புலம் பெயர்ந்து ஆங்காங்கே இருந்த வெட்டவெளி நிலங்களில் பண்ணை அமைத்து விவசாயம் செய்த வெள்ளையர்கள் வனவிலங்குகளிடமிருந்தும், பூர்வக்குடி செவ்விந்தியர்களிடமிருந்தும் தங்களை பாதுகாத்து கொள்ள பெரிதும் நம்பியது துப்பாக்கிகளையே. அதனாலேயே அமெரிக்காவின் அரசியலமைப்பு சட்டம் துப்பாக்கி ஏந்துவதை ஒரு தனிமனித உரிமையாகவே அறிவித்தது. ஆனால் அதன் விளைவாக துப்பாக்கி கலாச்சாரமும் பெருகி அதனால் ஏற்படும் வன்முறைகளும் மக்களை இன்று பெரிதும் அச்சுறுத்துகிறது. இன்று அமெரிக்காவில் Driving License வாங்குவது கடினம். ஆனால் Driving License வாங்கி விட்டால் அதை காட்டி பெட்டி கடையில் கடலை மிட்டாய் வாங்குவதை விட எளிதாக துப்பாக்கி வாங்கி விடலாம். இன்று 32 கோடி மக்கள் தொகை உள்ள அமெரிக்காவில் ராணுவம் மற்றும் போலீஸை தவிர்த்து 39 கோடிக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பொது மக்களிடம் உள்ளன. ஆனால் 28 கோடி கார்களே உள்ளன. அதாவது 100 பேருக்கு 120 துப்பாக்கிகள் உள்ளன அமெரிக்காவில். அதே இந்தியாவில் 100 பேருக்கு வெறும் 5 துப்பாக்கிகளே உள்ளதாம். காந்தி பிறந்த மண் என்று சும்மாவா சொன்னார்கள்( இந்த கணக்குகள் எல்லாம் குத்துமதிப்பானவை. அதாவது Approx ).


    இந்த பூர்வ குடிகளான செவ்விந்தியர்களை வில்லன்கள் என்று யாரும் தவறாக நினைத்து விடாதீர்கள். தங்கள் பூர்வீக பூமியை யாராவது அக்கிரமிப்பு செய்தால் அவர்களை எதிர்த்து தாக்குதல் நடத்துவது மனித இயல்பே. அவர்களின் செயலின் இந்த நோக்கம் பின்னாளில் புரிந்து கொள்ளப்பட்டு அவர்கள் முழுவதும் அரவணைக்கப்பட்டாலும் அவர்கள் தங்கள் நிலங்களை நிரந்தரமாக இழந்தது வரலாறு பெரிதாக கண்டு கொள்ளாத சோகங்களில் ஒன்று

      

    அமெரிக்கா முதலாளிகளுக்கு ஆப்பிரிக்காவிலிருந்து விற்கப்பட்ட கருப்பர் இனத்தவர் அடிமைகளாகவும் கொத்தடிமைகளாக மட்டுமே நடத்த பட்டனர். பத்தொன்பதாம்  நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது ஒரு முக்கிய நிகழ்வு. காரணம்  ஜனாதிபதியாக இருந்த Abraham Lincoln என்ற Statesman. அடிமைத்தனம் மற்றும் நிறவெறி சட்டப்படி குற்றமாக்கப்பட்டாலும் அது மக்கள் மனங்களில் இருந்து இன்றும் முழுவதும் நீங்கவில்லை என்பதே உண்மை

    

    இந்திய துணை கண்டத்தில் இருந்து மற்ற பிரிட்டிஷ் காலனிகளுக்கு புலம் பெயர்ந்து சென்ற பழுப்பு நிற தோல் உடையவர்கள் பெரும்பாலும் கொத்தடிமைகளாக வேலை செய்ய வற்புறுத்தப் பட்டார்கள். இவர்களில் படித்தவர்களாக இருந்த வெகு சிலருக்கு மட்டும் ஓரளவு கௌரவமான வேலை வாய்ப்புகள் இருந்தன. பத்தொண்பதாம்  நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து மலேசியா, பர்மா, தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள்( West Indies ), ஃபிஜி தீவுகள்( Fiji Islands ) போன்ற பகுதிகளுக்கு லட்சக்கணக்கானவர்கள் கூலி தொழில் செய்ய கொத்தடிமைகளாக அனுப்பபட்டனர். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவர்கள் மெல்ல விடுவிக்கப்பட்டனர். இப்படி விடுவிக்கப்பட்டவர்களுக்கு இந்தியா திரும்ப கப்பலில் டிக்கெட் வாங்கும் வசதி கூட இல்லை. அதனால் அந்தந்த ஊர்களிலேயே செட்டிலானார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இன்று ஓரளவு நல்ல வாழ்க்கை தரத்தில் இருப்பதை காணலாம். பிரபல வெளி நாட்டு கிரிக்கெட் வீரர்களான Nasser Hussain( England ), Rohan Kanhai, Kalicharan, Chanderpaul, Ramnaresh Sarwan, Sunil Narine( West Indies ), Deepak Patel, Jeetan Patel( New Zealand) , Aasif Karim ( Kenya ) , Hashim Amla ( South Africa ) போன்றவர்கள் இப்படி புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளியினரே!


    இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் பிரிட்டன் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய அதே சமயத்தில் அமெரிக்காவையும் தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால் அமெரிக்காவில் குடியேறிய வெள்ளையர்கள் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து போரில் ஈடுபட்டு வெற்றியடைந்தனர். 1781-ல் பிரிட்டிஷ் படைகளின் தளபதி Cornwallis அமெரிக்காவின் படைகளிடம் சரணடைந்தார். இதே Cornwallis- பிரிட்டிஷ் அரசு இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக 1786-ல் அனுப்பி வைத்தது. அவரது முக்கிய பணி அப்போது இந்தியாவில் பலம் பொருந்திய மன்னராக இருந்த திப்பு சுல்தானை வீழ்த்துவது. 1792-ல் நடந்த போரில் திப்பு சுல்தானை வென்றார் Cornwallis. திப்பு சுல்தானின் தோல்விக்கு முக்கிய காரணம் Cornwallis-ன் போர் திறமை அல்ல. திப்பு சுல்தானின் சக இந்திய மன்னர்களான மராத்தியர்களும், ஹைதிராபாத் நிஜாமும், திருவிதாங்கூர் ( Travancore ) மன்னரும் திப்பு சில்தானுக்கு எதிராக ஆங்கிலேயரின் படைகளோடு சேர்ந்து கொண்டு போரிட்டதே. அமெரிக்காவில் Cornwallis-ற்க்கு இப்படி எந்தவித Local Support-ம் கிடைக்காமல்  தோல்வி அடைந்தார் என்பதே உண்மை. பலவீனமடைந்த திப்பு சுல்தான் 1799-ல் ஆங்கிலேயருக்கு எதிராக நடந்த இறுதிப் போரில் வீர மரணமடைந்தார். ஆங்கிலேயர்கள் இந்தியர்களை வீழ்த்த இந்தியர்களையே வெற்றிகரமாக பயன்படுத்தினர் என்பதே வேதனையான உண்மை.


    அமெரிக்கா என்ற ஒரு புதிய வல்லரசின் எழுச்சியும், இந்தியா என்ற ஒரு பழமையும், செழிப்பும் மிக்க நாட்டின் வீழ்ச்சியும் ஆங்கிலேயரின் கண் பார்வையிலும், கை வண்ணத்திலும் ஏறக்குறைய ஒரே கட்டத்தில் நடந்தது எனலாம்.


    இதெல்லாம் சொல்லி முடிக்கறதுக்குள்ள நம்ம கப்பல் அமெரிக்காவை நெருங்கிடுச்சு. தூரத்துல ஒரு நகரம் தெரியுது. கப்பல் மேல் தளத்தில் ஒரு தாய், மகன், இரு மகள்கள் என நான்கு பேரும் அந்த நகரத்தையே பார்த்துட்டு இருக்காங்க. ரொம்ப இல்லைன்னாலும் ஓரளவு வசதியான குடும்பமா தெரியுது. இவங்க பெட்டி, படுக்கையெல்லாம் பார்க்கும் போது இவங்க புலம்பெயர்ந்து அமெரிக்காவுக்கு வர்ற மாதிரி தான் தெரியுது.அந்த தம்பி நல்லா உசரமா இருக்கார். ஒரு பதினெட்டு வயசிருக்கும். இந்த பதினெட்டு வயசு பையன் தான் நம்ம நீல சரித்திரத்தின் இரண்டு கதாநாயகர்களில் ஒருவர்


அந்த பையனின் பெயர்: ( அநேகமாக உங்கள் ஜீன்ஸ் பேண்ட் லேபிளில் அந்த பெயர் இருக்கும்) Levi Strauss.

  


ஆண்டு 1848. 




( தொடரும் )



நீல சரித்திரத்தின் அடுத்த பகுதி படிக்க 👇,

பகுதி #4 


நீல சரித்திரம் பகுதி #2 படிக்க 👇 ,

பகுதி #2



Previous
Next Post »

1 comments:

Click here for comments
karthikeyan
admin
11 December 2020 at 08:45 ×

awesome bro, i clearly see that you have done lot of research
appreciate you bro

Thank you So much karthikeyan :-)
Reply
avatar