கோழி கிறுக்கல்

கோழி கிறுக்கல்

கதை கருவின் பயணம் பகுதி-2 /kathai karuvin payanam part-2

        



கதை கருவின் பயணம் பகுதி- 2 

kathai karuvin payanam part -2 



     

கதை கருவின் பயணம் பகுதி- 2 ,kathai karuvin payanam part -2, kozhikirukkal
கதை கருவின் பயணம் பகுதி- 2




        சமீபத்தில் ஒரு பிரபல தமிழ் பட இயக்குனர் ஒரு பேட்டியில் Roman Holiday படம் இருபது ஆண்டுகள் கழித்து ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டதாக கூறியது நம் கவனத்தை ஈர்த்ததுஉடனே இப்போது எழுதி கொண்டிருக்கும்சந்தியா வந்தனம்’, ‘ நீல சரித்திரம்போன்றவற்றை அப்படியே போட்டுவிட்டு இதை எழுத தொடங்கிவிட்டோம் (இந்த ஆளு எதையுமே உருப்படியா, முழுசா செஞ்சு முடிக்க மாட்டான் போல என நீங்கள் நினைத்தால் நமக்குள் நல்ல புரிதல் வந்து விட்டதென்று அர்த்தம்).


             இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் Samuel Hopkins Adams. தனது 61வது வயதில் 1933-ல்  புகழ்பற்ற Cosmopolitan பத்திரிக்கையில் அவர் எழுதிய சிறுகதை Night Bus. இந்த கதை 1934 ஆம் ஆண்டு ‘It Happened One Night’ என்ற படமாக வெளிவந்தது. படத்தின் கதை இதுதான். ஒரு பணக்கார வீட்டு பெண் காதலிக்கும் நபரை தந்தை ஏற்க மறுக்கிறார். காரணம் அந்த நபர் உண்மையில் காதலிப்பது அந்த பெண்ணின் செல்வத்தையே. இதை உணராத அந்த பெண் தந்தைக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறார். அந்த இரவில் வேலை இல்லாத ஒரு பத்திரிக்கையாளரை சந்திக்கிறார். முதலில் மோதல். பிறகு நட்பு. பிறகு காதல் என்று அந்த இரவு முடிகிறது. மகள் வெளியேறியதை அறிந்த தந்தை அவள் முதலில் காதலித்த நபருடன் திருமணத்திற்க்கு சம்மதிக்கிறார். இறுதியில் அந்த பெண் ஹீரோவான பத்திரிக்கையாளருடன் கைகோர்கிறார். இந்த படம் மிக பெரிய வெற்றி பெற்றது. பல விருதுகளையும் வாங்கி குவித்தது


It Happened One Night படத்தின் கதையை இங்கேயே விட்டுவிட்டு Roman Holiday படத்தின் வரலாற்றை கொஞ்சம் பார்ப்போம்


            1930-40 களில் ஹாலிவுட்டின் முக்கிய கதாசிரியர்களில் ஒருவர் Dalton Trumbo. மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்து, கஷ்டப்பட்டு வேலை செய்து கொண்டே கல்லூரியில் படித்து, குடும்பத்தினரையும் காப்பாற்றி கொண்டிருந்த இவருக்கு சிறு வயது முதலே எழுதுவதிலும், பத்திரிக்கை துறையிலும் ஆர்வம் ஏற்பட்டது. ஆரம்ப கால கட்டத்தில் இவரது எழுத்துக்கள் பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டாலும் 1930-களில் இவரது கதை மற்றும் புதினங்களுக்கு வரவேற்பு அதிகமானது. மெல்ல திரை தொடர்பும் ஏற்பட இவர் Warner Bros படங்களுக்கு கதை, திரைகதை எழுதலானார். இந்த கால கட்டத்தில் அவர் கம்யூனிஸ சித்தாந்தத்தின் அனுதாபியாகவும் இருந்ததார்அது இரண்டாம் உலக போரின் முந்தைய கால கட்டம். அமெரிக்கா-சோவியத் ரஷ்யா இடையிலான பனிப்போர் தொடங்காத காலம். அமெரிக்காவில் கம்யூனிஸத்துக்கு எதிரான அபிப்பிராயம் அரசாங்கத்திலும் சாமானியர்களிடையேயும் பெருமளவில் ஏற்படாத காலம்அந்த காலகட்டத்தில் சோஷியலிஸம் பேசும் பிரபல ஹாலிவுட் படங்களும் வந்ததுண்டு. (நிஜம்தான். 1940-ல் பிரபல ஹாலிவுட் இயக்குனர் John Ford இயக்கிய Grapes of Wrath ஒரு நல்ல உதாரணம். இது எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று.)


         இரண்டாம் உலக போர் முடிந்த அதே தருணத்தில் தொடங்கியது அமெரிக்கா-சோவியத் ரஷ்யா இடையிலான பனிப்போர். ஒரு சில ஆண்டுகளிலேயே அமெரிக்காவில் கம்யூனிஸ சித்தாந்தத்திற்கு எதிரான கருத்துகள் ஆழமாக அனைத்து மட்டத்திலும் பரவியது. கம்யூனிஸ சிந்தாந்தத்தின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கபட்டவர்கள் கண்டறியப்பட்டனர். கைது செய்யபட்டனர். ஹாலிவுட்டிலும் அப்படி பத்து கலைஞர்கள் கண்டறியப்பட்டனர். அதில் நாம் மேற்கூறிய Dalton Trumbo-வும் ஒருவர்

       

    1947-ல் தங்கள் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் குறித்து ஆராயும் அமெரிக்காவின் காங்கிரஸ் ( நம்மூர் ராஜ்யசபா போன்றது ) கமிட்டி முன் ஆஜராகி இவ்விஷயத்தில் தங்கள் நிலைபாடு குறித்து தெளிவுபடுத்த இவர்கள் அழைக்கப்பட்டனர். ஆனால் ஒரு சித்தாந்தத்தின் மீது அனுதாபமோ , எதிர்ப்போ கொள்வது அரசியலமைப்பு சட்டம் தங்களுக்கு அளித்துள்ள தனிப்பட்ட உரிமை என்று கூறி ஆஜராக மறுத்தனர். விளைவு நம் Dalton Trumbo உள்பட பலரின் மேல் சந்தேக நிழல் வலுவாக படிந்தது. அமெரிக்கா காங்கிரஸை அவமதித்த குற்றமும் சேர்ந்து கொள்ள ஹாலிவுட் இவர்களை முற்றிலும் ஒதுக்கியது. Dalton Trumbo சில மாதங்கள் சிறையில் வேறு இருக்க நேரிட்டடது


    இதே சந்தேக நிழல் உலக புகழ் பெற்ற இன்னொரு கலைஞர் மீதும் விழுந்தது. பல ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தும் அவர் அமெரிக்க குடியுரிமை பெறாதது அந்த சந்தேகத்தை மேலும் வலுபடுத்தியது. 1952 -ல் தன் தாய்நாடான பிரிட்டனுக்கு சென்றிருந்த போது அவர் மீண்டும் அமெரிக்கா திரும்புவதற்கான பெர்மிட் ரத்து செய்யப்பட்டது. விளைவு தான் முப்பது ஆண்டுகள் கோலோச்சிய ஹாலிவுட்டில் தன் வாழ்க்கையின் கடைசி இருபத்தைந்து ஆண்டுகள் அவரால் கால் பதிக்கவே முடியவில்லை. அந்த மகா கலைஞனின் பெயர் சார்லி சாப்ளின்

          

          சோவியத் ரஷ்யாவிலோ இந்த பனிப்போர் காலங்களில் அடக்குமுறைகள் இதை விட கடுமையாக இருந்தது. ஒரு சாமானியரோ அல்லது திரைப்பட கலைஞரோ  கம்யூனிஸத்துக்கு எதிரானவர் என சந்தேகிக்கபட்டாலே அவர் கடும் பனி பிரதேசமான சைபீரியாவின் குலாக் சிறையில் வருட கணக்கிலோ அல்லது வாழ்நாள் முழுதுமோ கழிக்க வேண்டி இருக்கும். ஒரு இயக்குனர் படம் எடுப்பதற்கு முன் சோவியத் ரஷ்யாவின் சென்ஸார் போர்டான ‘Goskino’-விடம் அப்படத்தின் கதை, திரைகதை, வசனத்தை ஒப்படைத்து அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறப்பட்ட    Script-ல் இல்லாத ஒரு extra காட்சி படத்தில் இருந்து விட்டாலோ அல்லது கம்யூனிஸ கொள்கையுடன் லேசாக முரண்படும் காட்சிகள் இடம் பெற்று விட்டாலோ அல்லது ஆட்சியாளர்களை குறை கூறும் காட்சிகள் இருந்தாலோ படம் கண்டிப்பாக வெளிவராது


            சரி. நாம் Dalton Trumbo கதையை தொடருவோம். சிறையிலிருந்து வெளியே வந்ததும் Dalton Trumbo-விற்கு யாரும் ஹாலிவுட்டில்  வாய்ப்பு தரவில்லை. எழுத்தாளர் சங்கத்திலிருந்தும் இவர் நீக்கப்பட்டிருந்தார். வேறு வழி இல்லாமல் 1950-ல் அண்டை நாடான மெக்ஸிகோவுக்கு சென்று குடும்பத்தோடு வசிக்கலானார். ஆனாலும் தொடர்ந்து எழுதி கொண்டே இருந்தார். இவர் சொந்த பெயரில் எந்த கதையும் வெளியிட முடியாது என்பதால் புனை பெயரிலோ அல்லது நண்பர்கள் பெயரிலோ வெளியிட வேண்டிய நிலை. 1953-ல் இவர் கதை/திரைகதை எழுதிய Roman Holiday படம் இவரது  நண்பரும் எழுத்தாளருமான Ian McLellan Hunter பெயரில் வெளிவந்தது. படம் மெகா ஹிட் மட்டுமல்ல , சிறந்த கதைக்கான ஆஸ்கார் விருதையும் தட்டி சென்றது. Ian Mclellan Hunter அந்த விருதை தன் பெயரிலேயே பெற்று கொண்டார். யாரும் சந்தேக படவில்லை.தான் பெற்ற குழந்தையின் தாயார் வேறொரு பெண்மணி என்று இந்த உலகம் அவரை போற்றி புகழ்ந்தால் எப்படி ஒரு தாய் துடிப்பாளோ அதற்க்கு ஒத்த மனநிலையே Trumbo என்ற படைப்பாளிக்கும் இருந்திருக்க வேண்டும்


     இதை தொடர்ந்து 1957 -ல்  ‘The Brave one’ என்ற படத்திற்கு கதை எழுதினார் Trumbo.  இம்முறை Robert Ritch என்ற புனை பெயரில் எழுத இப்படமும் ஹிட். ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் இப்படத்தின் கதாசிரியர் Robert Ritch-க்கு சிறந்த கதைக்கான விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், அதை பெற்று கொள்ள Robert Ritch என்ற நபர் தான் இல்லை. இது என்னடா ஆச்சரியமா இருக்கே!! கேள்வி படாத பெயராகவும் இருக்கே என பத்திரிக்கையாளர்கள் புலனாய்வு செய்ததன் முடிவில் Robert Ritch என்ற பெயருக்கு சொந்தகாரர் Dalton Trumbo என்பது புரிந்ததுஹாலிவுட்டிலும்இது என்ன அபத்தம்? ஒரு திறமை வாய்ந்த  கலைஞனை ஏன் ஒதுக்க வேண்டும் இப்படி?’ என்ற ஞானோதயம் பிறக்க மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தார் Dalton. இதை தொடர்ந்து அமெரிக்கா திரும்பியவர் Exodus, Spartacus போன்ற பல வெற்றி படங்களுக்கு தன் சொந்த பெயரிலேயே கதை/திரைகதை எழுதினார். (பிரபல எழுத்தாளர் Leon Uris எழுதிய Exodus என்ற சிறந்த நாவலை திரை வடிவமாக்கிய பெருமை Dalton Trumbo அவர்களையே சாரும். வரலாற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த நாவல் கண்டிப்பாக பிடிக்கும்.எனக்கும் அப்படியே). 1976 ஆம் ஆண்டு இவர் தனது 71 வது வயதில் புற்று நோயால் மரணமடைந்தார்


       Dalton Trumbo மீண்டும் அமெரிக்கா திரும்பியதும் Roman Holiday படத்திற்கு ஆஸ்கார் விருதை பெற்று கொண்ட Ian McLellan Hunter எந்த வித தயக்கமும் இன்றி அந்த படத்தின் கதாசிரியர் Dalton Trumbo தான் என்ற உண்மையை உலகுக்கு உரைத்தார். தான் பெற்று கொண்ட ஆஸ்கார் விருதையும், அந்த படத்திற்கான சம்பளத்தையும்  Dalton இடமே ஒப்படைத்தார். ‘என் கதையை திருடிட்டாங்கஎன நம்மூரில் அடிக்கடி கேள்விபடும் நமக்கு இந்த Hunter செய்தது சற்று ஆச்சரியமாக தான் இருக்கும். இந்த Hunter ஒரு உண்மையான நண்பேன்டா என்று தோன்றுகிறது. என்னதான் Hunter விருதை ஒப்படைத்தாலும் ஆஸ்கார் விருது பட்டியலில் Dalton Trumbo பெயர் சேர்ககப்பட்டது என்னவோ 1993-ல் தான். அதாவது அந்த படம் வெளியாகி நாற்பது ஆண்டுகள் கழித்தே!! 


    நம்ம Trumbo கதையே ரொம்ப சுவாரஸ்யமா இருக்கே. இதையே படமாக எடுக்கலாம் போல இருக்கேஎன நீங்கள் நினைத்தால் அதில் தவறில்லை. 2015 ஆம் ஆண்டு அவரின் Biopic ‘Trumbo’ ஏற்கனவே வெளிவந்து விட்டது


          சரி. இப்போ Roman Holiday படத்தின் கதைக்கு வருவோம். ஒரு ஐரோப்பிய நாட்டின் இளவரசி ரோம் நகருக்கு அரசாங்க பயணமாக வந்து  தனது நாட்டின் தூதரகத்தில் தங்குகிறார்ராஜ வாழ்க்கையில் ஏற்கனவே சலிப்படைந்த இவர் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறுகிறார். ரோம் நகர வீதியில் ஒரு இளம் பத்திரிக்கயாளரை சந்திக்கிறார்தனது அடையாளத்தை வெளிகாட்டாமல் அவரோடு இரண்டு நாட்கள் ரோம் நகரில் சுற்றுகிறார். இருவரும் காதல் வயபடுகின்றனர். ஒரு கட்டத்தில் அந்த இளம் பத்திரிக்கையாளருக்கு  இவரின் உண்மையான அடையாளம் தெரிய வருகிறது. இரண்டு நாட்கள் கழித்து இளவரசி மீண்டும் தன் கடமைகளை தொடர தூதரகத்திற்கே சென்று விட இந்த சந்திப்பு என்றுமே ரகசியமாக இருக்கும் என்ற உறுதி மொழியோடு காதலர்கள் பிரிகின்றனர்

              

    இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமான Audrey Hepburn  சிறந்த நடிகைகான ஆஸ்கார் விருதையும், Golden globe விருதையும் வென்றார். அப்பாவிதனம், இளமை ததும்பல், ஏக்கம், காதல், பிரிவு என ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியருப்பார். Bicycle Thieves போன்ற இத்தாலிய neo-realism படங்களில் ரோம் நகரின் அழகை கண்டிருப்போம். அந்த ரோம் நகர வீதிகளில் இந்த இளம் காதலர்கள் அந்த காலத்து Vespa ஸ்கூட்டரில் வலம் வரும் காட்சி இன்று பார்த்தாலும் ரசிக்கும் படியாக இருக்கும். Audrey Hepburn இதன் பின்னர் Sabrina,Charade,My Fair Lady, How to Steal a Million என பல நினைவில் நீங்கா படங்களில் நடித்தார்கருப்பு-வெள்ளை தமிழ் சினிமாக்களில் 1940/50/60-களின் தமிழகத்தின் Outdoor அல்லது புறவாழ்வியல் விரிவாக ஆவணப்படுத்த படவில்லை என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. இதை பற்றி விரிவாக வேறொரு பக்கத்தில் கோபித்து கொள்வோம்.

                

    1934-ல் வெளிவந்த It Happened One Night மற்றும் 1953-ல் வெளிவந்த Roman Holiday படங்களின் கதை கரு என்ன 


    ஏதோ ஒரு காரணத்திற்காக வீட்டை விட்டு வெளியேறும் பணக்கார வீட்டு பெண், தன் அடையாளத்தை மறைத்தோ, மறைக்காமலோ அங்கு  தான் சந்திக்கும் ஒருவரோடு காதல் வசப்படுகிறார்   


   இதை ஹாலிவுட்டில் ஒரு குத்து மதிப்பாக Runaway Bride Genre என்றும் சொல்வார்கள். இந்த கதை கருவை கெட்டியாக பிடித்து கொண்டனர் இந்தியாவின் கதாசிரியர்கள். இந்த one liner-க்கு முன்னும், பின்னும், இடையிலும், சைடிலும் தங்கள் கற்பனைகளை சேர்த்து எக்கச்க புது கதைகளை புனையலானார்கள். பணக்கார பெண்ணை ஏழையாக்கினார்கள், சில படங்களில் நடிகையாக்கினார்கள், தாய்மாமன்/முறைமாமன்  கொடுமையை one liner-க்கு முன் சேர்த்தார்கள். Arranged Marriage பிடிக்காமல் கதாநாயகியை வீட்டை விட்டு ஓட வைத்து on the way-ல் ஹீரோவை மீட் பண்ணி லவ் பண்ண வைத்தார்கள். ஏன், ஹீரோயினுக்கு ரெஸ்ட்  கொடுத்து ஹீரோவை கூட  வீட்டை விட்டு ஓட வைத்தார்கள்


 அடுத்த அத்தியாயத்தில் இந்த கதை கருவின் பயணத்தை முழுதும் trace செய்வோம் நண்பர்களே....!



                                                                                                (பயணம் தொடரும் ...)



கதை கருவின் பயணம் அடுத்த  பகுதிபடிக்க👇,


குதி #3





கதை கருவின் பயணம் பகுதி #1 படிக்க 👇,


பகுதி- 1






Previous
Next Post »

1 comments:

Click here for comments
CR. Anandan
admin
12 September 2020 at 07:24 ×

A video presentation will be very much appreciated.
= CR. ANANDAN =

Thank you So much CR. Anandan :-)
Reply
avatar