கோழி கிறுக்கல்

கோழி கிறுக்கல்

கோழி கிறுக்கல் - நீல சரித்திரம் பகுதி 5 / kozhikirukkal - Neela Sarithiram Episode 5

                      


கோழி கிறுக்கல் - நீல சரித்திரம் பகுதி 5


 kozhikirukkal - Neela Sarithiram Episode 5



jeans denim history , jeans denim history in tamil , kozhi kirukkal , jeans color dye , neela sarithiram , history of jeans pant . Indigo color
கோழி கிறுக்கல் - நீல சரித்திரம் பகுதி 5



    நாம் ஏதோ அவரை ஒரு குரல் அழைத்தது அதனால்  அவர் நியுயார்க்கில் இருந்து கலிஃபோர்னியா செல்லப்போகிறார்  என சாதாரணமாக ஒரு வரியில் சொல்லி விட்டோம். அந்த காலத்தில் அது அவ்வளவு எளிதல்ல. இப்படி யோசிச்சு பாருங்கள் நண்பர்களே! பம்பாய் டெக்ஸ்டைல் மில்களில் இருந்து சென்னை துணிகடைகளுக்கு 1853- ல் எப்படி ஒருவர் சரக்கை ஏற்றி கொண்டு வந்திருப்பார்? 1853-ல் பம்பாயிலிருந்து  தாணே வரை வெறும் 34 கிலோமீட்டர் மட்டுமே ரயில் பாதை அமைக்கப்பட்டிருந்தது. ஒன்று கடல் மார்க்கமாக தென்னிந்தியா மற்றும் இலங்கையை சுற்றி புயல் , மழையிலிருந்து தப்பித்து சென்னை வர வேண்டும். அல்லது தரை மார்க்கமாக ஒரு மாட்டு வண்டியிலோ, குதிரை வண்டியிலோ சரக்கை ஏற்றி மேற்கு தொடர்ச்சி மலையை ஏறி இறங்கி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளை சரக்கோடு படகில் கடந்து வழியில் மழை, வெயிலில் இருந்தும் வழிப்பறி கொள்ளையர்களிடமிருந்தும் சரக்குகளை காப்பாற்றி தன்னையும் காப்பாற்றி கால்நடைகளையும் அங்கங்கே மாற்றி மொத்தத்தில் பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து ஹைதராபாத் நிஜாம் நாட்டை கடந்து மறுபடி பிரிட்டிஷ் இந்தியாவில் பிரவேசித்து சென்னை வந்து சேர வேண்டும்.. 


அதாவது பம்பாயிலிருந்து சென்னை தரை மார்க்கமாக சுமார் 1350 கிலோமீட்டர்களே. கடல் மார்க்கமாக சுமார் 1450 கடல் மைல்களே. அதற்கே யோசித்து பார்த்தால் நமக்கு கண்ணை கட்டுது என்றால், நியுயார்க் நகரிலிருந்து Levi Strauss பயணம் செய்த San Francisco நகர் தரை மார்க்கமாகவே சுமார் 4800 கிலோ மீட்டர் தூரம் (சுமார் 3000 மைல்கள்). கடல் மார்க்கமாகவோ சுமார் 13200 கடல் மைல்கள் (அப்போது பனாமா கால்வாய் வெட்டப்படவில்லை ). 


                             தரை மார்க்கமாக ஒருவர் நியுயார்க்கில் இருந்து சிறிது தூரம் ரயிலிலும், பிறகு மிஸௌரி ஆற்றில் சிறிது தூரம் படகிலும்,  பிறகு மாட்டு வண்டியிலும், குதிரை வண்டியிலும் சில ஆயிரம் கிலோமீட்டர்கள் கடந்து கடுமையான பனி, குளிர் மற்றும் வனவிலங்குகளிடமிருந்தும் தன்னையும் தன் உடைமைகளையும் காத்து கொண்டு, பூர்வ குடிகளான செவ்விந்தியர்களின் தாக்குதலிலிருந்து தப்பி இறுதியாக மிக கடினமான சியரா நெவாடா மலைகளில் ஏறி இறங்கும் வரை உயிரோடு இருந்தால் கலிஃபோர்னியாவில் பிரவேசிக்கலாம். இப்படி சில மார்க்கங்கள் (Trail) இருந்தன. Oregon Trail குறிப்பிடத்தக்க ஒரு மார்க்கமாக இருந்தது. இதை போன்ற பயணங்களில் தனியாகவோ அல்லது ஒரு குடும்பம் மட்டுமே செல்வது சாத்தியமில்லை. ஒரு கூட்டமைப்பாக மட்டுமே செல்ல முடியும். இதை Caravan என்பார்கள்


                            இதெல்லாம் நமக்கு ஒத்து வராது. கப்பலில் நியுயார்க்கில் ஏறினால் கலிஃபோர்னியாவில் தான் இறங்கனும். அப்படியொரு ரூட் சொல்லுங்கப்பாஎன யாராவது பிடிவாதம் பிடித்தால் நியுயார்க் நகரிலிருந்து கப்பலில் தெற்கு நோக்கி அப்படியே அட்லாண்டிக்கில் கீழே இறங்கி, வடஅமெரிக்காவை கடந்து, நம்ம வெஸ்ட் இண்டீஸ் தீவுகளை கடந்து, தென் அமெரிக்கா முழுவதும் கடந்து, அதன் தென்கோடியான கொம்பு முனை (Cape Horn) அருகே U-turn போட்டு அட்லாண்டிக் சமுத்திரத்திலிருந்து பசிப்பிக்கில் நுழைந்து (கப்பலை ஓட்டுபவர் லேசாக கண் அயர்ந்து U-turn மிஸ்ஸானால் நேரே Antarctica வந்துவிடும்) பசிப்பிக்கில் அப்படியே வடக்கே மேலேறி தென் அமெரிக்கா முழுதும் மீண்டும் கடந்து, மெக்ஸிகோவையும் கடந்துபல இடங்களில் நிறுத்தி, தங்கி முற்றிலும் வெவ்வேறு சீதோஷண  நிலைகளை அனுபவித்து சில மாதங்களில் ஒரு வழியாக கலிஃபோர்னியா வந்து சேரலாம். நாம் பயணம் செய்யும் காலம் புயல், மழை சீசனாக இருந்தால் Extra Risk அதில்


                இந்த அக்கப்போரெல்லாம் இல்லாமல் மூன்றாவதாக ஒரு வழி இருந்தது. அதையே பெரும்பாலும் அனைவரும் தேர்ந்தெடுத்தனர். வடஅமெரிக்கா அகலவாக்கில் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பரந்து விரிந்திருந்தாலும் அது கொஞ்சம் கொஞ்சமாக குறுகி ஒரு இடத்தில் வெறும் ஐம்பது மைல்கள் (80 கிலோமீட்டர்) மட்டுமே அகலம் உள்ளது. இந்த ஐம்பது மைல்களை கடந்தால் அட்லாண்டிக் சமுத்திரத்திலிருந்து பசிபிக் சமுத்திரம் வந்து விடலாம். அந்த குறுகலான நிலப்பரப்பு இருக்கும் நாடு தான் பனாமா (Panama). அந்த கால கட்டத்தில், அதாவது 1850-களில் பனாமாவின் முக்கியத்துவத்தை உணரத் தொடங்கியிருந்தது அமெரிக்கா. ஆனால் அதற்காக கால்வாய் வெட்டும் அளவிற்கு எல்லாம் யோசித்ததாக தெரியவில்லைஅது போன்ற ஒரு மிகப்பெரிய ஒரு திட்டத்தை நிறைவேற்றத் தேவையான தொழில்நுட்ப வசதியும் , பணவசதியும் அப்போது வளர்ந்து வரும் நாடான அமெரிக்காவில் இல்லை என்றே சொல்ல வேண்டும். அதை விட முக்கியம் இது போன்ற பெரிய திட்டங்களை பற்றி visualize செய்து, அதை பற்றி கனவு கண்டு, அதை துணிச்சலோடு செயல்படுத்தி வெற்றி காணும் சமூகமாக அப்பொழுது அமெரிக்கா உருவாகவில்லை என்பதே உண்மைஅதனால் அமெரிக்கா அப்பொழுது யோசித்தது பனாமாவை கடக்க 80 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை அமைக்க வேண்டுமென்பதே. 1845-ல் Panama Rail Road பணியை துவக்கி 1855-ல் முடித்தது. உண்மையில் இது தான் உலகின் முதல் Transcontinental Railway  (தூரம் சிறியது. அதனால் அந்த பெருமை இதற்கு கிடைக்கவில்லை) . அதாவது நியுயார்க்கிலிருந்து  பனாமா நாட்டின் கோலன் என்ற நகர் வரை அட்லாண்டிக் சமுத்திரத்தில் கப்பலில் வந்திறங்கி, கோலன் நகரில் இருந்து ரயிலேறி சிறிது தூரம் பயணித்து பிறகு  சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பனாமாவின் தலைநகரான பனாமா சிட்டி வந்தடைந்து, பசிபிக் முத்திரத்தில் கப்பலில் ஏறி மொத்தம் சில வாரங்களிலேயே கலிஃபோர்னியா சென்றடைந்து விடலாம்என்ன ஓரு பிரச்சனை என்றால் பனாமா இருக்கும் மத்திய அமெரிக்கா நாடுகளில் கொசுவினால் ஏற்படும் மலேரியா காய்ச்சலாலும் , மஞ்சள் காய்ச்சலாலும் ( Yellow fever) பயணிகள் பலர் உயிரிழக்க நேரிட்டது. வழிப்பறி கொள்ளையும் அதிகம். இதையெல்லாம் தவிர பனாமா சிட்டியில் மது, மாது, சூது என பயணிகளை தள்ளாடச் செய்யும் வாய்ப்புகளும் எக்கச்சக்கமாகவே இருந்தது


    ஆனால், அந்த கால கட்டத்தில் வேறு இரண்டு வல்லரசுகள் கால்வாய் வெட்ட திட்டம் தீட்டி கொண்டிருந்தன. அது பனாமாவில் அல்ல எகிப்தில். அதற்கு முக்கிய காரணம் இந்தியாவிற்கும், அதன் சுற்று பகுதிகளுக்கும் விரைவில் கப்பலில் வந்தடைவது. இதில் பிரிட்டனை முந்தி கொண்டது பிரான்ஸ் நாடு. இதை முன்னெடுத்து சென்றவர் பிரான்ஸ் நாட்டின் Ferdinand de Lesseps. இவரது முயற்சியில் 1859-ல் தொடங்கி 1869 -ல் இந்த கால்வாய் முழுதும் வெட்டப்பட்டு போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டது. இதன் மூலம் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு வரும் தொலைவு சுமார் 9000 கிலோ மீட்டர் அளவிற்கு குறைந்தது. இது மனித குலத்தின் மிகப் பெரிய சாதனையாக அப்போது கருதப்பட்டதுஇது தான் பிரசித்தி பெற்ற Suez Canal. இதை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்தது. உடனே பனாமா கால்வாய் வெட்ட முயற்சி செய்யவில்லை. மாறாக அமெரிக்காவின் கிழக்கு பகுதியிலிருந்து கலிஃபோர்னியா வரையில் ரயில் பாதை அமைக்கும் பணியை 1863-ல் தொடங்கி 1869-ல் நிறைவு செய்தது. இது நிஜமாகவே உலகின் முதல் Transcontinental ரயில்வே. மொத்த தொலைவு 3077 கி.மீ


                அப்போது Suez Canal-ன் மொத்த நீளம்  160 கிலோமீட்டர். ஆனால் பனாமாவில் கால்வாய் வெட்ட வேண்டிய தூரம் மொத்தம் 80 கிலோ மீட்டர் மட்டுமே. முதல் முயற்சியாக Suez கால்வாயையே வெற்றிகரமாக வெட்டி விட்டோம் . இந்த பனாமா கால்வாய் அதில் பாதி தான். ஜுஜூபி. இதை எளிதில் செய்து விடலாம் என்ற ஒரு வித over confidence உடன் 1882-ல் பனாமா கால்வாய் வெட்டத் தொடங்கினார் Suez Canal வெட்டிய அதே Ferdinand De Lesseps. ஆனால் அவர் கணக்கை பொய்யாக்கியது இரண்டு விஷயங்கள். முதலாவது, Suez Canal உடைய பிராஜக்ட் டிஸைனையே இதிலும் பயன்படுத்தினார். இந்த design பனாமாவிற்கு ஒத்து வர வில்லை. (நாம் நீல சரித்திரத்தில் focused ஆக இருப்பதால் இந்த design பற்றிய technical details-குள் செல்ல வேண்டாம்). 


இரண்டாவது, project risk identification-ல் முக்கியமான ரிஸ்க் ஒன்றை தவறவிட்டார். அந்த ரிஸ்க் மலேரியா மற்றும் Yellow fever. இதில் வேலை செய்த தொழிலாளர்கள் மற்றும் கம்பெனி நிர்வாகிகள் ஏராளமானோர் இந்த நோய்களுக்கு பலியாகினர். திட்டமிட்டபடி கால்வாய் வெட்ட முடியாமல் delay ஆக, பொருளாதார ரீதியான சிக்கல்களும் அதிகரித்தன. இதில் ஊழலும் சேர்ந்து கொள்ள Ferdinand De Lesseps திவாலானார்கால்வாய் வெட்டும் முயற்சி 1888 -ல் கைவிடப்பட்டது. தனது 89 ஆம் வயதில் 1894-ல் Ferdinand de Lesseps மரணமடைந்தார்


             இதிலிருந்து பாடம் கற்று கொண்ட அமெரிக்கா இந்த திட்டத்தை 1904-ல் கையில் எடுத்தது. முதலில் பனாமாவின் சுகாதாரத்தை சீர் செய்து கொசுக்களை குறைத்தது. டிசைனை மாற்றியது. பத்தாண்டுகளில் கால்வாயை கட்டி முடித்து 1914 ஆகஸ்ட் மாதம் போக்குவரத்துக்கு திறந்து விட்டது. இதன் பிறகு நியுயார்க்கையும், கலிஃபோர்னியாவையும் இணைக்கும் கடல் பயணம் 13200 கடல் மைல்களில் இருந்து 5200 கடல் மைல்களக குறைந்தது . ஆனால் இது அப்போது உலகத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை. உலகத்தின் கவனம் அப்போது ஐரோப்பாவின் பக்கம் இருந்தது. ஐரோப்பாவில் முதலாம் உலகப் போர் அப்போது தான் தொடங்கியிருந்தது


    தமிழ் சினிமாவில் Flashback என்று பின்னோக்கி போவார்கள். நாம் அடிக்கடி முன்னோக்கி போய்விடுகிறோம். நீங்களும் என்னை தடுப்பதில்லை. இப்பொழுது நாம் 1914-ல் இருந்து 1853 ஆம் ஆண்டிற்கு வருவோம். Levi-யின் அண்ணன்மார்கள் கலிஃபோர்னியாவிலும் கால் பதிக்க முடிவு செய்து Levi Strauss- கலிஃபோர்னியாவிற்கு அனுப்ப முடிவு செய்தனர். 1853 பிப்ரவரியில் Levi  கலிஃபோர்னியாவிற்கு குறுக்கு வழியில் பயணமானார் (அதான் Short route பனாமா வழியாக). அப்பொழுது பனாமாவில் ரயில் பாதை முழுதும் கட்டி முடிக்கப்படவில்லை. அதனால் பனாமாவின் கிழக்கு பகுதி வரை கப்பல், பிறகு ரயில், பிறகு படகு, பிறகு குதிரை மேல், இறுதியாக மீண்டும் பனாமாவின் மேற்கு பகுதியிலிருந்து கலிஃபோர்னியாவின் San Francisco நகரம் வரை கப்பல் என ஒரு மாத பயணத்தின் முடிவில்  ஒரு  வழியாக 1853 மார்ச் மாதத்தில் கலிஃபோர்னியா போய் சேர்ந்தார் Levi. இவர் வியாபாரம் செய்யப்போகும் சரக்கு (Cargo) Long route-ல் (தென் அமெரிக்காவை சுற்றி) அடுத்த இரண்டு மாதங்களில் வந்து சேர்ந்தது


    நாம் மேற்கூறிய Supply Chain மற்றும் Logistics Challenges பார்த்து நம்ம Levi  Strauss களைத்து போனாரோ இல்லையோ இதை படித்த நீங்கள் டையர்டு ஆகியிருக்கலாம். இதில் என்ன விசேஷமென்றால் தொழில்நுட்பமும், தொலை தொடர்பும், கட்டுமான வசதிகளும் (Infrastructure), எக்கச்சக்கமாக வளர்ந்த இந்த கால கட்டத்திலும்  உலகமயமாக்கலாலும் (globalization), நுகர்வோர் பயன்பாடு அதிகரித்ததாலும் (Consumerism) , டோர் டெலிவரி செய்யும் e-commerce வளர்ச்சியாலும் இந்த Supply Chain Complexities அதிகரித்துள்ளதே தவிர குறைந்தபாடில்லை


அதெல்லாம் சரி. இப்படி கஷ்டபட்டு கலிஃபோர்னியாவுக்கு எதுக்கு போகனும்? அங்கே என்ன தங்கமா தோண்டி எடுத்தாங்க? ‘


அதையும் பார்க்கத்தானே போறோம்.


(நீல சரித்திரம் தொடரும்)



Newest
Previous
Next Post »

1 comments:

Click here for comments
karthikeyan
admin
25 December 2020 at 10:44 ×

very nice bro

Thank you So much karthikeyan :-)
Reply
avatar