கோழி கிறுக்கல்

கோழி கிறுக்கல்

நீல சரித்திரம் பகுதி 1 /kozhi kirukkal - Neela Sarithiram Episode 1

         


 நீல சரித்திரம்  பகுதி 1 

Neela Sarithiram Episode 1 

how to make jeans pant,color of jeans, natural dye, Neela Sarithiram, Jeans pant, Denim,  Blue Jeans, dungaree, jeans color,  kozhikirukkal, neela sarithiram
நீல சரித்திரம் பகுதி 1 

    ஒரு இருபது, இருபத்தஞ்சு வருஷமா ஒரே (மாதிரி) பேண்ட்டையே போட்டு போட்டு நம்ம காலின் நிறமே நீலமாக மாறி போய்விட்டது. கார் வாங்க போனாலும், கறிவேப்பிலை வாங்க போனாலும், நல்ல காரியத்துக்கு போனாலும், வேறு காரியத்துக்கு போனாலும் ஒரே மாதிரி அழுக்கேறிய நீல பேண்ட் தான். வருஷா வருஷம் தீபாவளிக்கு ஒரே கலர் பேண்ட் வாங்குவதில் என் தாயார் அலுத்து  கொண்டார் என்றால், கறிவேப்பிலை வாங்க போன அதே அழுக்கு பேண்ட்டோடு என் நிச்சயதார்த்தில் சபையில் அமர்ந்ததை பார்த்து நொந்தே போனார்


    இன்றைய சமுதாயத்தில் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமில்லாமல் சமத்துவத்தின் அடையாளமாக கடைசி இரண்டு தலைமுறையின் அனேகமாக அனைத்து கால்களின் நிறமும் நீலம் தான். பஸ், ரயில், விமானம் என்று எதில் ஏறினாலும் இன்று மெஜாரிட்டி நீல நிற கால்களே. வேஷ்டி, புடவையிலும் ஓரளவு இந்த சமத்துவம் தெரிந்தாலும் அதில் எல்லாம் பாலிஸ்டர், பட்டு, ஜரிகை என ஒரு கட்டத்திற்கு மேல் ஏற்ற தாழ்வு வெளிவந்து விடுகிறது. ஆனால் பிராண்டடோ இல்லையோ லேசாக கசங்கி கொஞ்சம் அழுக்கு பிடிக்க தொடங்கி விட்டாலே சமத்துவம் தான் நம்ம டெணிம் பேண்டில். இஸ்திரி செலவு, சோப்பு செலவு, தண்ணீர் செலவு எல்லாம் ரொம்ப குறைவுஇதில் ஆண், பெண் பேதமுமில்லை. பெண்களுக்கும் ஸ்கின் டைட், ஸ்கின்னி, ஹைரைஸ், லோரைஸ், ஜெக்கிங்ஸ், கால் உள்ளே போகாத டைப், உள்ளே போனால் வெளியே எடுக்க முடியாத டைப் என தனி அலம்பல்கள்


          Cool, Smart, Rebel, Casual , Youthful, Stylish , Truant என எப்படி ஒருவர் தன்னை நினைத்து கொண்டாலும் அவரது கால்களின் நிறம் நீலமாக தான் இருக்கும் அனேகமாக. வருங்காலத்தில் கரை வேஷ்டியை போல் கரை ஜீன்ஸ், கரை டெனிம் வந்தாலும் ஆச்சரியமில்லை. இப்படி நம்மை இணைக்கும் Blue Denim, Blue Jeans இவற்றின் Flashback தான் என்ன


           Denim, Jeans என்ற வார்த்தைகளை மாறி மாறி நாம் உபயோகித்தாலும் இரண்டும்  ஒன்றல்ல. Jeans என்பது ஒரு வகை பருத்தியினால் ஆன கடினமான, வலிமையான துணிமணி( Cotton Coudroy ). இது இத்தாலியில் உள்ள Genoa என்ற இடத்தில் நெசவு செய்யபட்டதால் அதற்கு Jeans என்று பெயர். இந்த வகை மிக கெட்டியான பருத்தி ஆடை கடினமான வேலை செய்யும் தொழிலாளர்கள் மத்தியில் பிரபலமடையவே பிரான்ஸ் நாட்டில் ‘Serge De Nimes’ என்ற இடத்தில் இருந்த நெசவாளர்கள் அதே போல் Jeans ஆடை உற்பத்தி செய்ய முற்பட்டனர்ஆனால் அவர்கள் இறுதியில் நெசவு செய்ததோ சற்றே வித்தியாசமான,  Jeans போன்ற ஆனால் வேறு ஒரு விதமான ஆடையை. மனம் தளராமல் தங்கள் ஊர் பெயரிலேயே அதை Denim என்று பெயரிட்டு விற்பனை செய்ய தொடங்கினர். நம்மூரில் காஞ்சிபுரம் பட்டு, பெங்கால் காட்டன், பவானி ஜமுக்காளம் என ஊரோடு அழைக்கப்படுவதை போல் தான்  Denim, Jeans என்ற பெயர்களும். இந்த மாதிரியான நிகழ்வுகளை ஆங்கிலத்தில் Serendipity என்பர். அதாவது எதேச்சையாக அல்லது அதிர்ஷடவசமாக எதையாவது புதியதாய் கண்டுபிடிப்பது அல்லது உருவாக்குவது. உலகின் பல அரிய கண்டுபிடிப்பகள் ( X-Ray உள்படஇவ்வகையை சேரும். இந்த Denim தயாரிப்பு நிகழ்வுகள்  நடந்தது எல்லாம் பதினாறாம் நூற்றாண்டில். 


    இந்த Denim-ல் என்ன விசேஷம் என்றால் துணி நெய்வதற்கு பயன்படுத்த படும் இரண்டு நூல்களில் வெளிபுறத்தில் காணப்படும் Warp நூல் நீல சாயம் (Indigo) பூசப்பட்டும், அதற்கு கீழ் இழையோடியிருக்கும் Weft நூல் இயற்கையான வெள்ளை நிறத்திலும் இருக்கும். இன்றும் உங்கள் Denim பேண்டின் உட்புறம் வெள்ளையாக இருப்பதை பார்க்கலாம். (டவுட்டா இருந்தால் உங்க Denim பேண்டை செக் பண்ணிட்டு வாங்க). நமக்கு தெரிந்தவரை இந்த Denim தவிர்த்து அனேகமாக மற்ற அனைத்து துணி வகைகளுக்கும் உள்ளேயும் வெளியேயும் ஒரே நிறமே


    இங்கே ஒரு சிறு detour செய்து இந்த Indigo சாயத்தின் வரலாற்றை ஒரு இரண்டு para அளவிலாவது தெரிந்து கொள்வது அவசியம். இந்த நீல நிற Indigo சாயம் இயற்கையான சாயம். இது சில ஆயிரம் ஆண்டுகளாகவே அதிகமாக தயாரிக்கப்பட்டது இந்தியாவில் தான். இந்தியாவிலிருந்து கிரேக்கத்துக்கும் , ரோமானியத்திற்க்கும் (இத்தாலி) பெரிய அளவில் ஏற்றுமதி ஆனது இந்த சாயம். இந்தியாவிலிருந்து வந்ததால் கிரேக்க மொழியில் இதன் பெயர் Indikon என்றும், லத்தின் மொழியில் Indicum என்றும் அழைக்கப்பட்டது. இதுவே மருவி ஆங்கிலத்தில் ‘Indigo’ என அழைக்கப்பட்டது

          

    இந்த நீல சாயம் Indigofera Tinctoria ( இந்தியில் நீல், தமிழில் புனல்முருங்கை, அவுரி. வேறு பெயர்கள் உங்களுக்கு தெரிந்தால் கமெண்டில் குறிப்பிடுங்கள்) என்ற செடியின் இலைகளில் இருந்து தயாரிக்கபட்டது. பிஹார், உத்திர பிரதேசம், வங்காளம் போன்ற பகுதிகளில் இச்செடி அதிகமாக விளைவிக்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்னர் வரை இந்த Indigo விளைச்சலில் ஓரளவாவது விவசாயிகளுக்கு லாபம் இருந்தது. ஆனால் கிழக்கு இந்திய கம்பெனி இந்த சாயத்திற்கு ஐரோப்பாவில் இருக்கும் மவுசை பார்த்து இந்த வியாபாரத்தை தங்கள் கட்டுபாட்டிற்க்குள் கொண்டு வந்து லாபத்தின் பெரும் பகுதியை தாங்களே எடுத்து கொள்ள தொடங்கினர். இதனால் விவசாயிகளின் வருமானம் குறைந்தது. ஆனாலும் அடக்குமுறையாலும் வேறு பல வழிகளிலும் விவசாயிகளை மிரட்டி Indigo விளைச்சலை தொடர செய்தனர் ஆங்கிலேயர்கள். ஜமீன்தார்களும், நிலச்சுவான்தார்களும், நவாப்புகளும் ஆங்கிலேயர்களுக்கு இதில் உடந்தையாயினர். விவசாயிகள் பலரும் தொடர் கடனாளிகள் ஆகும் போக்கு தொடர்ந்தது.


    1850-களின் பிற்பகுதியில் வங்காளத்தில் Indigo விவசாயிகள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்இதை விசாரிக்க Indigo commission அமைத்தது ஆங்கிலேய அரசு. இந்த கமிஷனின் அறிக்கையில் Tower என்ற ஆங்கிலேயர்  ‘இந்தியாவிலிருந்து ஐரோப்பாவில் வந்திறங்கும் ஒவ்வொரு பெட்டி Indigo சாயத்திலும் இந்திய விவசாயிகளின் இரத்த கறை படிந்திருக்கிறதுஎன நேர்மையாக உண்மையை குறிப்பிட்டார். இதன் விளைவாக ஆங்கிலேயர்கள் 1862-ல் Indigo Act சட்டத்தை அமுல்படுத்தி விவசாயிகளுக்கு சில சலுகைகளை (ஒப்புக்குதான்வழங்கினர். ஆயினும் விவசாயிகளின் மீதான அடக்குமுறையும் அவர்களை கடனாளிகளாக்கும் போக்கும் குறைந்தபாடில்லை

              

    ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த விவசாயிகள் 1917-ம் ஆண்டு பீகாரின் Champaran மாவட்டத்தில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இம்முறை அவர்கள் துணைக்கு அழைத்தது அந்த காலத்திலேயே வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் சம்பாதித்த வக்கீல்  ஒருவரை. இந்த வருமானம் எல்லாம் தனக்கு  தேவையில்லை என அவர் அப்பொழுது வக்கீல் தொழிலை உதரி விட்டு தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியிருந்தார். அவர் பெயர்  மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. ஆம்!. காந்தியடிகள்  இந்தியாவில் செய்த முதல் சத்தியாகிரக போராட்டம் Champaran-ல் விவசாயிகளுக்காக செய்த இந்த போராட்டம் தான். இதன் முடிவில் ஆங்கிலேய அரசு மேலும் சில உண்மையான சலுகைகளை தர முன் வந்தது. இந்த  போராட்டத்திற்கு  பிறகு  தான்  காந்தியடிகள்பாபுஜிஎன்றும்    ‘மகாத்மா காந்திஎன்றும் அழைக்கப்படலானார்


    பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வாக்கில் ஜெர்மனியின் பிரபல இராசாயன நிறுவனமான BASF இந்த சாயத்தை செயற்கை முறையில் (Synthetic dye) பெரிய அளவில் உற்பத்தி செய்யும் முறையை ஐரோப்பாவில் அறிமுக படுத்த இந்த Indigo சாயத்திற்கான மவுசு பெருமளவில் குறைந்தது. இதை பார்த்து இந்திய விவசாயிகளும் கொஞ்சம் நிம்மதியடைந்தனர் என்றே சொல்ல வேண்டும்


      நாம் ஒரு அழுக்கு Denim பேண்டில் ஆரம்பித்து இந்தியாவின் சத்தியாகிரக போராட்டதிற்குள் போய் விட்டோம். இப்ப மறுபடியும் நீல Denim பேண்ட் வரலாற்றை தொடருவோம்


       இதுவரை நாம் Denim துணி உற்பத்தி செய்தாகிவிட்டது. அதற்கு நீல சாயமும் பூசி விட்டோம். இனி வேண்டியது எல்லாம் அதை விற்க ஒருவர், தைக்க ஒருவர், அதை வாங்குவதற்கான சரியான காரணமும், சூழ்நிலையும் தான். இவை எல்லாம் எப்படி கைகூடியது என கண்டறிய நாம் அமெரிக்காவுக்கு  கப்பலேறுவோம். Denim துணி ஐரோப்பாவில் முதன் முதலில் தயாரானாலும் அதன் சரித்திரத்தின் அனேக பக்கங்கள் எழுதப்பட்டது என்னவோ அமெரிக்காவில் தான்


    சார் !, நாம கப்பலேறதுக்கு முன்னால ஒரு டவுட். அந்த காலத்துல நெசவு தொழிலில் இந்தியாவோட நெசவாளர்கள் one of the best ன்னு கேள்வி படறோம். அப்படி இருக்கறப்போ இந்த Denim மாதிரியான ஒரு துணியை நாமளே நெசவு செய்திருக்க மாட்டோமாஅது என்ன நாம கஷ்டபட்டு சாயம் தயாரிச்சு, அதை இன்னொருத்தர் பூசி பெயர் வாங்கறது? ‘ .  


       இதை படிச்சிட்டு இருக்கிற நண்பர்கள் இப்படி ஒரு கேள்வியை எழுப்பினதில் ரொம்பவே மகிழ்ச்சி. ஏன் தயாரிக்காமல் நாம்? பதினேழாம் நூற்றாண்டில் நாமும் பருத்தியால் ஆன ஒரு வித முரட்டு ஆடையை தயாரித்தோம். இதை ஆங்கிலத்தில் Calico Cloth என்பார்கள். Denim துணியை உற்பத்தி செய்த பின் நம்மூர் சாயம் பூசினார்கள். ஆனால் நம்மூரிலேயே  நீல சாயம் கிடைத்ததால் நூலிலேயே சாயம் தடவி பின் அதை  துணியாக நெசவு செய்தோம். இந்த துணியை டென்ட் போடவும், கப்பலில் பாய்மரம் கட்டவும் பயன்படுத்தி வந்தனர். இதை பார்த்த ஆங்கிலேயர்கள்அட இது சூப்பரா இருக்கே !என்று இங்கிலாந்துக்கு வாங்கி சென்று விற்பனை செய்தனர். பாய்மரங்கள் பழுதாகும் போதுஇந்த துணி நல்லாருக்கே. இதை ஏன் Waste பண்ணனும் ?என யோசித்த கப்பல் மாலுமிகள் அந்த துணியில் ஆடை தைத்து போட அதுவும் தொழிலாளர்கள் மத்தியில் பிரபலமடைந்தது. ஆங்கிலேயர்கள் அமெரிக்காவிற்கு குடி புகுந்த போது இந்த ஆடையும் அங்கே சென்றது. அதுவே இப்போது இந்தியாவுக்கு Branded பேண்டாக வந்துள்ளது. இந்த துணி பம்பாய் அருகில் உள்ள டோங்கிரி என்ற கிராமத்தில் தயாரானது என்றால் அது நமக்கு  சாதாரணமாக படும். ஆனால் இந்த டோங்கிரியே ஏற்றுமதி ஆகி மீண்டும் நம்மூருக்கே வந்து English Accent-ல் Dungarees என அழைக்கப்பட்டு, அதை Mall-களில் சில ஆயிரம் கொடுத்து வாங்கினால் நமக்கு ரொம்ப Style ஆக படும்


    அட தேவுடா!!     இந்த   Dungaree   நம்மூரு   டிஸைன்தானா?  இது   தெரியாம Mall-க்கு போய் ஒரு Dungaree டவுசருக்கு மூவாயிரம் ரூபா கொடுத்துட்டேனேப்பா‘ என புலம்பியவாறே இந்த Jeans/ Denim/ Dungaree வரலாற்றின் அடுத்த அத்தியாயங்களை புரட்ட  அமெரிக்கா பயணமாவோம்


                                                                                            ( நீல சரித்திரம் தொடரும் ......)



நீல சரித்திரத்தின் அடுத்த பகுதி படிக்க 👇,


 பகுதி #2



 


Previous
Next Post »

1 comments:

Click here for comments
Unknown
admin
22 August 2020 at 06:44 ×

may be this could be the reason we are called men in blue

Thank you So much Unknown :-)
Reply
avatar